×

தர்மபுரி அருகே சிவாடியில் எரிபொருள் சேமிப்புக்கிடங்குக்காக நிலம் வழங்க எதிர்ப்பு

தர்மபுரி, பிப்.22: தர்மபுரி அருகே சிவாடியில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்க நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் ஆட்சேபனை மனுக்களை அளித்து வருகின்றனர்.இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவிலிருந்து தர்மபுரி அருகே சிவாடியில் எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்கப்பட உள்ளது. ஆந்திர மாநிலத்தில், ஏற்கனவே உள்ள குழாய் வழித்தடத்தை நீட்டிப்பு செய்து, அங்கிருந்து தர்மபுரி அருகே சிவாடியில் அமைக்கப்பட உள்ள 2 சேமிப்புக் கிடங்குகளில் எரிபொருள் சேமிக்கப்பட உள்ளது. மேலும், இங்கிருந்து தமிழகம் மற்றும் கர்நாடகாவிற்கு எரிபொருள் விநியோகம் செய்யப்படும் என அந்த நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சிவாடி கிராமத்தில் ரயில் பாதை மற்றும் வனப்பகுதியையொட்டி, சுமார் 113 ஏக்கரில் இந்தக் கிடங்கு இரண்டு அலகுகளாக அமைக்கப்பட உள்ளது. தர்மபுரி ரயில் நிலையத்திலிருந்து மிக அருகிலும், சிவாடி ரயில் நிலையத்திற்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவு, சேலம் விமான நிலையத்திற்கு 29 கிலோ மீட்டர் தொலைவும், தேசிய நெடுஞ்சாலை எண்-7 என பல்வேறு வசதிகளோடு, இந்த பகுதி அமைந்துள்ளதாக அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வந்த தொடக்கத்திலேயே, அக்கிராம மக்கள் அனைவரும், எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் திரளாக வந்து மனு அளித்தனர். இருப்பினும், இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம், சிவாடியில் சேமிப்புக் கிடங்கு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில், தனது அலுவலகத்தை அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. அதேபோல, எரிபொருள் சேமிப்புக் கிடங்குக்கு நிலம் எடுப்பது தொடர்பான ஆட்சேபனை இருப்பின் தெரிவிக்கலாம் என அண்மையில் நாளிதழ்களில் அறிவிப்பு விளம்பரம் வெளியானது.
இப்பணிக்காக தர்மபுரி            மாவட்ட நிர்வாகம் தனி தாசில்தாரையும் நியமனம் செய்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 17ம் தேதி முதல் நல்லம்பள்ளி தாலுகா அலுவலகத்தில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு, தனி தாசில்தார் பொதுமக்களிடம் ஆட்சேபனை மனுக்களைப் பெற்று வருகிறார். இந்த மனுக்கள் இம்மாதம் இறுதிவரை அனைத்து வேலை நாட்களிலும் பெறப்பட உள்ளது. சிவாடியில் எரிபொருள் சேமிப்புக் கிடங்குக்கான நிலம் எடுக்க உள்ள இடம், சுமார் 96 பட்டாதாரர்களுக்கு சொந்தமானதாகும். இதுவரை 96 பேர், இத்திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்புத் தெரிவித்து தங்களது ஆட்சேபனை மனுக்களை அளித்துள்ளனர். பொருளாதாரத்தில் பின்தங்கிய தலித் மற்றும் பிற்பட்டோருக்கு சொந்தமான இந்த நிலம் மட்டுமே தங்களுக்கு வாழ்வாதாரமாக உள்ளது. எனவே, இந்த நிலத்தை எரிபொருள் சேமிப்புக் கிடங்கு அமைக்க வழங்கமாட்டோம் என அப்பகுதி மக்கள் தங்களது ஆட்சேபனையில் தெரிவித்துள்ளனர்.


Tags : land ,Dharmapuri ,Chitta ,
× RELATED சேலம்-தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை...