×

அய்யப்பன்தாங்கல்- மவுலிவாக்கம் இடையே புதிதாக மினி பஸ்கள் விட வேண்டும்: தா.மோ.அன்பரசன் கோரிக்கை

சென்னை, பிப். 15: சட்டப் பேரவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது ஆலந்தூர் தா.மோ.அன்பரசன் (திமுக) கூறியது: ஆலந்தூர் தொகுதியில் அய்யப்பன்தாங்கல் - மவுலிவாக்கம் இடையே மினிபஸ் இயக்க அரசு முன்வருமா? அமைச்சர் விஜயபாஸ்கர்: தற்போது 3 மினி பஸ்கள் அய்யப்பன்தாங்கல் ராஜரத்தினம் நகர் வழியாக இயக்கப்படுகின்றன. அய்யப்பன்தாங்கல் -மவுலிவாக்கம் இடையே போதிய அளவில் மாநகர பஸ்கள் இயக்கப்படுகின்றன. எனவே, தற்போது அந்த பகுதியில் மினி பஸ் இயக்க அவசியம் எழவில்லை. தா.மோ. அன்பரசன்: அய்யப்பன்தாங்கல் -மவுலிவாக்கம் பகுதிகளில் முருகன் நகர், மதுரம் நகர், இந்திராணி நகர் சாய் நகர், அபிராமி நகர் போன்ற இடங்களில் 30 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் அய்யப்பன்தாங்கல் வருவதற்கு 3 கி.மீ. நடந்து வர வேண்டியுள்ளது. எனவே மதுரம் நகர் வழியாக மினி பஸ் இயக்க வேண்டும்.

அமைச்சர் விஜயபாஸ்கர்: உறுப்பினர் குறிப்பிடும் பகுதிகளை ஆய்வு செய்து தேவைப்பட்டால் மினி பஸ் இயக்க ஆவன செய்யப்படும். தா.மோ.அன்பரசன்: திமுக ஆட்சியில் குன்றத்தூர், முகலிவாக்கம் பகுதிகளில் 12 வழித்தடங்களில் பஸ்கள் விடப்பட்டன. 50 கி.மீ. வரை நீடித்து கிராமங்களுக்கு பஸ்கள் விடப்பட்டன. தற்போது அவை படிப்படியாக குறைக்கப்பட்டு விட்டன. எனவே குறைக்கப்பட்ட பஸ்களை மீண்டும் விட வேண்டும்.  விஜயபாஸ்கர்: பயணிகள் எண்ணிக்கைக்கேற்ப பஸ்கள் இயக்கப்படுகின்றன. உறுப்பினர் கூறிய வழித்தடங்களில் பஸ்கள் குறைக்கப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Moulivakkam ,Th.M.Abancaran ,
× RELATED மூவரசன்பட்டு கங்கா நகரில் திமுக...