×
Saravana Stores

பள்ளிப்பட்டு சார்பதிவாளர் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது

 

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு (பொறுப்பு) சார் பதிவாளர் மோகன்ராஜ் சென்ற சொகுசு காரில் நேற்று முன்தினம் 20ம் தேதி இரவு கணக்கில் வராத ரூ.11 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நேற்று 21ம் தேதி காலை 8 மணி முதல் திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர், பல்லவன் நகரில் உள்ள சார்பதிவாளர் மோகன்ராஜ் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ராமச்சந்திர மூர்த்தி, இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி ஆகியோர் தலைமையில் 10 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இந்த சோதனையானது மதியம் 3 மணி அளவில் நிறைவடைந்தது. இதனையடுத்து வெளியே வந்த அதிகாரிகளிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, பள்ளிப்பட்டு பகுதியில் காரில் எடுத்து செல்லப்பட்ட ரூ.11 லட்சம் கைப்பற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சோதனையில் வங்கி கணக்கு உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாகவும், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

மேலும் சம்பந்தப்பட்ட (பொறுப்பு) சார்பதிவாளர் மோகன்ராஜ் என்பவர் மீது தொடர்ந்து புகார் வந்ததன் அடிப்படையில் சோதனை நடைபெற்றது. கணக்கில் வராத ரூ.11 லட்சம் கைபற்றப்பட்டதால் துறை ரீதியான விசாரணை மற்றும் நடவடிக்கை மேற்கொள்ள பரிந்துரைக்கப்பட்டதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்தனர்.

The post பள்ளிப்பட்டு சார்பதிவாளர் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Thiruvallur District, ,Pallipattu ,Mohanraj ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் கவரப்பேட்டை...