×

திண்டுக்கல்லுக்கு வந்த ஆதியோகி ரதத்திற்கு உற்சாக வரவேற்பு

திண்டுக்கல், பிப். 14: தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் கோவையில் இருந்து திண்டுக்கல் வந்த ஆதியோகி ரதத்துக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஈஷாவில் மஹா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, 25வது மஹா சிவராத்திரி விழா வரும் மார்ச் 4ம் தேதி 112 அடி ஆதியோகி முன்பு கொண்டாடப்பட உள்ளது. விழாவில் சத்குருவின் அருளுரை, நள்ளிரவு தியானம், தலைசிறந்த கலைஞர்களின் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள், மஹா அன்னதானம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற உள்ளது. மேலும், ஆதியோகி ஒரு வருடமாக அணிந்திருந்த ருத்ராட்சம் மற்றும் சர்ப்ப சூத்திரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட உள்ளது.
மக்கள் ஆதியோகியை தரிசிக்கும் விதமாக தென் கயிலாய பக்தி பேரவை சார்பில் 5 ஆதியோகி ரதங்கள் தமிழகம் முழுவதும் ஊர்வலமாக சென்று கொண்டிருக்கின்றன. அதன் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள ஆதியோகியில் இருந்து கடந்த பிப்ரவரி 1ம் தேதி புறப்பட்ட ஒரு ரதம் திண்டுக்கல் மாவட்டத்துக்கு நேற்று மாலை வந்தது. தாடிக்கொம்பு சாலையில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஆதியோகி ரதத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும், பொங்கல் வைத்து சிறப்பு அர்ப்பணையும் நிகழ்ந்தது. சிவனுக்கு மிகவும் பிடித்த டமருவும் இசைக்கப்பட்டது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் மங்கள்ராம் பங்கேற்றார்.
தொடர்ந்து நேற்று பழநி சாலையில் உள்ள ரவி எலக்ட்ரிக்கல்ஸ் அருகே ஆதியோகிக்கு பூர்ண கும்ப மரியாதை மற்றும் முளைப்பாரியுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், 108 விநாயகர் கோயில், வெள்ளை விநாயகர் கோயில் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு ஆதியோகி ரதம் ஊர்வலமாக சென்றது.
செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் ஆதியோகிக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். நத்தம், வேடச்சந்தூர், ஒட்டன்சத்திரம், பழநி, வத்தலக்குண்டு, மதுரை, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். இந்த ரதம் மார்ச் 3ம் தேதி கோவை சென்றடையும்.

Tags : Athokhi ,Dindigul ,
× RELATED அங்கித் திவாரி மனு தள்ளுபடி