×
Saravana Stores

4 முறை மனு கொடுத்தும் புயல் நிவாரணம் கிடைக்காததால் புள்ளான்விடுதியில் போராட்டம் அதிகாரிகளை மக்கள் முற்றுகை

ஆலங்குடி, பிப். 14: நான்கு முறை மனு கொடுத்தும் புயல் நிவாரணம் கிடைக்காததால் புள்ளான்விடுதி கிராம சேவை மையத்தின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அப்போது பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டனர். 2018ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி அதிகாலை வீசிய கஜா புயலால் ஆலங்குடி தாலுகாவுக்கு உட்பட்ட கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம், நெடுவாசல் மற்றும் சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் தென்னை, பலா, தேக்கு உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தது. மேலும் கூரை, ஓட்டு வீடுகளும் சேதமடைந்தது. இந்நிலையில் சேதமடைந்த வீடுகளை மராமது செய்ய உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. ஆனால் ஒவ்வொரு கிராமத்திலும் பாதிக்கப்பட்ட பலருக்கும் நிவாரணம் கிடைக்காமல் பொதுமக்கள் மீண்டும் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் கீரமங்கலம் அருகில் உள்ள புள்ளான்விடுதி கிராமத்தில் புயலால் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ள 57 பேர், 4 முறை விண்ணப்ப மனு கொடுத்தும் நிவாரணம் கிடைக்கவில்லையென கூறி கடைவீதியில் உள்ள கிராம சேவை மையத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்ததும் வடகாடு இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையில் 25க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். இதைதொடர்ந்து ஆலங்குடி சரக வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பேசசுவார்த்தை நடத்த சென்றனர். அப்போது அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அதில் புயல் தாக்கி 20 நாட்களுக்குள் விண்ணப்பித்தவர்களுக்கு தான் இதுவரை நிவாரணம் வந்துள்ளது. அதனால் நிவாரணம் கிடைக்காதவர்கள் காலம் கடந்து விண்ணப்பம் கொடுத்தவர்களாக இருக்கும் என்று வருவாய் ஆய்வாளர் கூறினர். ஆனால் ஒவ்வொரு வரும் 4 முறை விண்ணப்பம் கொடுத்திருக்கிறோம் அதிலும் 10 நாட்களுக்குள் விண்ணப்பம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது 57 பேருக்கு மட்டும் நிவாரணத்தொகை கிடைக்கவில்லை. ஆனால் வருவாய் கணக்கில் அதில் 26 பேருக்கு பணம் வழங்கி இருப்பதாக அடையாளம் செய்யப்பட்டுள்ளது என்றனர். இதைதொடர்ந்து பொதுமக்களிடம் வடகாடு இன்ஸ்பெக்டர் பாலாஜி ேபச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இதுவரை மனு கொடுத்ததுபோல தற்போதும் அனைவரும் மனு தயார் செய்து என்னிடம் கொடுங்கள். வருவாய் ஆய்வாளரிடம் கொடுத்து நாளை (இன்று) மாலைக்குள் அந்த மனுக்களுக்கான தீர்வு என்ன என்பதை கேட்டு சொல்கிறேன் என்றார். இதையடுத்து இன்ஸ்பெக்டரிடம் அனைவரும் நிவாரணம் கேட்டு மனு கொடுத்து கலைந்து சென்றனர்.

Tags : siege ,Dakshin Katta ,
× RELATED தமிழ் சினிமா பாணியில் சடலத்துக்கு...