×

தர்ம நகராட்சியில் ₹10 கோடி வரி நிலுவை வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு சீல் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

புரிதர்மபுரி, பிப்.13: தர்மபுரி நகராட்சியில் ₹10 கோடி வரி நிலுவை உள்ளது. இதை வசூலிக்க நகராட்சி அதிகாரிகள் தண்டோரா போட்டு அதிரடி வசூலிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாடகை செலுத்தாத 10 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
தர்மபுரி நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன. நகர பஸ் ஸ்டாண்ட், புறநகர் பஸ் ஸ்டாண்ட் மற்றும் சந்தை பேட்டை பகுதிகளில் கடைகள் வாடகை விடப்பட்டுள்ளது. கடை வாடகை மூலம் ₹5 கோடி, குடிநீர் வரி மூலம் ₹3 கோடி, சொத்து வரி, குத்தகை, பாதாளசாக்கடை திட்டத்திற்கு நீதி வசூலிப்பு என ஆண்டுக்கு ₹20 கோடி நகராட்சிக்கு வருவாய் வருகிறது. ஆனால் சமீபகாலமாக நகராட்சி கடை வாடகை நிலுவை அதிகரித்துள்ளது. இதுபோல் குடிநீர் வரி, சொத்துவரி, காலியிடம் வரி, தொழில்வரி என பல கோடி நிலுவை உள்ளது. இந்த தொகை வசூலிக்க நகராட்சி நிர்வாக முடிவு செய்தது. ஏற்கனவே ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
நேற்று தர்மபுரி நகராட்சி அலுவலக மேலாளர் தமிழ்செல்வி, நகரமைப்பு ஆய்வாளர் திலகவதி, நகரஅமைப்பு அலுவலர் ஸ்ரீதர், நகராட்சி துப்புரவு அலுவலர் இளங்கோவன் மற்றும் பணியாளர்கள் புறநகர், டவுன் பஸ் ஸ்டாண்டில் தண்டோரா போட்டு கடை வாடகை வசூலிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். அதிக நிலுவைத்தொகை செலுத்தாத பேக்கரி, ஓட்டல் உள்ளிட்டை 10 கடைகளை மூடி சீல் வைத்தனர். நிலுவையில் பாதி அளவு தொகை செலுத்தி கடையை திறந்துக்கொள்ளலாம். இல்லையென்றால் மறு ஏலத்திற்கு கடைகள் வரும் என எச்சரிக்கை செய்தனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், தர்மபுரி நகராட்சிக்கு ஆண்டு வருமானம் வரி மற்றும் கடை வாடகை, குத்தகை மூலம் ₹19.62 கோடி. இதில் ₹10 கோடி என்ற அளவில் நிலுவை உள்ளது. இந்த நிலுவைத்தொகை வசூலிக்க கடை வாடகை எடுத்தோர், குத்தகை எடுத்தோர், வரி செலுத்தும் நபர்களுக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. அப்படி இருந்தும் நிலுவை தொகை செலுத்தப்படவில்லை. இதையடுத்து கடந்த வாரத்தில் இருந்து தர்மபுரி நகராட்சி பகுதியில் தண்டுரா போட்டு நகராட்சிக்கு நிலுவை தொகை வசூலிக்கும்பணியில், நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. குடிநீர் வரி செலுத்தாதவர்ளுக்கு குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.

25 மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 10க்கும் மேற்பட்ட கடைகள் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. நிலுவைத்தொகை வழங்கும் வரை தண்டுரா போட்டு அதிரடி நடவடிக்கை தொடரும். நகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை இயக்க மாதம் ₹1.50 கோடி தேவைப்படுகிறது. இந்த நிலுவை தொகை வசூலித்தால் மட்டுமே, சம்பளம் வழங்க முடியும். விரைவில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வர உள்ளது. அதற்குள் இந்த நிலுவை தொகை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Tags : Seal officers ,shops ,Dharma Municipality ,
× RELATED ஒரத்தநாடு கடை தெருவில் 5 கடைகளில் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி