×

தொப்பூர் கணவாய் வனப்பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு

தர்மபுரி, பிப்.8: தொப்பூர் கணவாய் வனப்பகுதியில், தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சமூக வன ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில், பல்லாயிரக்கணக்கான ஹெக்டேர் வனங்கள் வளர்ச்சி பணிகளுக்காக, அழிக்கப்பட்டு வருகிறது. இதனால், வன விலங்குகளும், அரிய தாவர வகைகளும் அழிந்து வருகின்றன. வனங்களை அழிப்பதால் புவி வெப்பமயமாகி, பருவமழை பொய்த்து வரலாறு காணாத வறட்சி, பாலைவனங்களில் மழை பெய்தல், எதிர்பாராத பெருவெள்ளம் ஆகிய பேரிடர்கள் ஏற்படுகின்றன. நாட்டின் நிலப்பரப்பில் 33 சதம் வனப்பகுதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.  ஆனால், தமிழகத்தின் மொத்த நிலப்பரப்பில் தற்போது 17.59 சதவீதம் மட்டுமே வனப்பகுதிகளாக உள்ளன. தர்மபுரி மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பில், 38.17 சதவீத நிலப்பரப்பு வனங்களாக உள்ளது.

 இதனிடையே, ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் கவர்கள் உள்பட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு, கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் தமிழக அரசு தடை விதித்துள்ளது. பல வருடங்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பிளாஸ்டிக் கழிவுகள், தற்போது தொப்பூர் வனப்பகுதியான கணவாய் மலைப்பாதையில் ஆங்காங்கே கொட்டிக்கிடக்கின்றன. சாலையில் செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த குப்பைகளை கொட்டி செல்வதால், வனப்பகுதி முழுவதும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி கிடக்கிறது. இவை மண்ணில் மக்காமல், மழைநீரை நிலத்தின் உள்ளே புக விடாமல் தடுப்பதால், சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் நிலவுகிறது. எனவே, தொப்பூர் வனப்பகுதியில் பரவலாக தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்ற, வனத்துறையினர்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என  சமூக வனஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா