×

நீடாமங்கலம் அருகே ஜல்லிக்கற்கள் பெயர்ந்து சேதமடைந்த சாலை அடிக்கடி பஞ்சராகும் வாகனங்கள்

நீடாமங்கலம், பிப்.8: நீடாமங்கலம் அருகே மூணாறு தலைப்பு பெரிய வெண்ணாறு தென்கரையிலிருந்து வாசுதேவமங்கலம் வரை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து மோசமாக சேதமடைந்துள்ளது. இந்த சாலையை சீரமைத்து புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நீடாமங்கலம் அருகில் உள்ளது மூணாறு தலைப்பு இங்கு கல்லணையிலிருந்து பிரிந்து வரும் பெரிய வெண்ணாற்றில் பாமனியாறு, கோரையாறு, சிறிய வெண்ணாறு என 3 ஆறுகள் பிரிகிறது. கல்லணையிலிருந்து பிரிந்து வரும் பெரிய வெண்ணாற்றின் தென்கரை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக வாசுதேவமங்கலம் வரை கப்பிகள் பெயர்ந்தும், மண் சாலையாகவும், கரடுமுரடான சாலையாகவும், சாலையோரம் புதர் மண்டியும் காணப்படுகிறது. இந்த சாலையில் பொதுப்பணித்துறை அதிகாரிகளோ அல்லது சாலை பாதுகாவலர்களோ வாகனங்களில் செல்ல முடியாத நிலை உள்ளது.இந்த சாலை வழியாக வெள்ளங்குழி, சித்தமல்லி, நடுப்படுகை, பன்னிமங்கலம், வாசுதேவமங்கலம் ஊர்களிலுள்ள பொதுமக்கள் மூணாறு தலைப்புக்கு வருவதாக இருந்தால் கற்கள் பெயர்ந்துள்ள இந்த கரடு முரடான சாலையில் வரவேண்டியுள்ளது. இரவு நேரங்களில் வரும்போது வாகனங்கள் பஞ்சராகி சிலர் அங்கேயே இரு சக்கர வாகனத்தை போட்டுவிட்டு மறுநாள் காலையில் பஞ்சர் ஒட்டி எடுத்துச் செல்லும் அவல நிலை தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்த பெரிய வெண்ணாற்றில்  தென்கரைகள் மோசமாக உள்ளதால் ஆற்றில் தண்ணீர் வரும்போது வாசுதேவமங்கலம், பன்னிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை நேரில் பார்வையிட்டு மேடாக்குவதோடு, புதுப்பித்து சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Neidamangalam ,road ,
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை