×

பிளாஸ்டிக் தடை எதிரொலி வாழை இலை விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி

ஆண்டிபட்டி, பிப்.3: பிளாஸ்டிக் தடை எதிரொலியால் சந்தையில் வாழை இலையின் விலை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தேனி மாவட்டத்தில், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இந்நகருக்கு அருகில் ஓடும் வைகை ஆற்றின் ஓரத்தில் புலிமான்கோம்பை, தர்மத்துபட்டி, சீரெங்கபுரம், கரட்டுபட்டி, அரபடித்தேவன்பட்டி, குன்னூர் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகின்றனர். இதில் சில விவசாயிகள் நெல், தென்னை, மா, போன்ற விவசாயத்தை அடுத்து வாழையை கணிசமாக சாகுபடி செய்துள்ளனர்.இந்த நிலையில், ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து வாழை இலை விலை உச்சத்தை எட்டியுள்ளது. அதாவது சந்தையில் கட்டு ஒன்று ரூ.ஆயிரத்துக்கு மேல் விற்பனையாகிறது. இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இது குறித்து வாழை விவசாயிகள் கூறுகையில், ‘‘கடந்த காலங்களில் வாழைக்காய்கள்அறுவடைக்குப் பின் வாழை இலைகளை வேலையாட்களைக் கொண்டு அறுத்து, கட்டுகளாக கட்டி விற்பனைக்காக சந்தைகளுக்கு அனுப்பினால் விலை ரூ.150லிருந்து ரூ.200 வரை செல்லும். இதனால் கூலியாட்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.பிளாஸ்டிக் தடை எதிரொலியால், பொதுமக்கள் மத்தியில் வாழை இலைக்கு வரவேற்பு உள்ளதால், சந்தையில் கட்டு ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது’’ என்றனர்.

Tags :
× RELATED பயிர்களை அழிக்கும் படையப்பா மூணாறு விவசாயிகள், மக்கள் பீதி