×

தினசரி தாமதமாக வரும் ரயில் இரணியல் ரயில் நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்

நாகர்கோவில், பிப்.6: பயணிகள் ரயில் தினசரி தாமதமாக இயக்கப்படுவதால் இரணியல் ரயில் நிலையத்தில் பயணிகள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவனந்தபுரம் - நாகர்கோவில் பயணிகள் ரயில் தினசரி தாமதமாக இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். காலை 7 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படுகின்ற இந்த ரயில் காலை 9 மணிக்கு நாகர்கோவில் ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு வந்து சேர வேண்டும். ஆனால் தினமும் கால தாமதத்துடன் இந்த ரயில் இயக்கப்படுகிறது. அத்துடன்  பாறசாலை, குழித்துறை, இரணியல் ரயில் நிலையங்களில் 15 நிமிடங்கள் வரை இந்த ரயில் நிறுத்திவிடப்படுவது தாமதத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் பிற துறை அலுவலங்களில் பணியாற்றுகின்ற பணியாளர்கள், மாணவ மாணவியர் பலர் இந்த ரயிலில் குழித்துறை, இரணியல் ரயில் நிலையத்தில் இருந்து நாகர்கோவில் வருகின்றனர். இவர்கள் ரயில் தாமதம் அடைவதால் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்தநிலையில் நேற்று காலை இரணியல் ரயில் நிலையம் வந்து சேர்ந்தபோது ரயில் வழக்கம்போல் நிறுத்திவிடப்பட்டது. அப்போது அங்கு இருந்த பயணிகள் ஒன்று திரண்டு ஸ்டேஷன் மாஸ்டர் அலுவலகத்திற்கு சென்று ரயில் நிறுத்திவிடப்பட்டு இருப்பதற்கான காரணத்தை கேட்டனர். சிக்னல் கிடைக்காததால் ரயில் நிறுத்திவிடப்பட்டிருப்பதாக ஸ்டேஷன் மாஸ்டர் பதில் கூற அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இந்த பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்று பயணிகள் ஸ்டேஷன் மாஸ்டரிடம் வலியுறுத்தினர். தொடர்ந்து ரயில் புறப்பட தயாரானதால் ரயிலில் ஏறி புறப்பட்டு சென்றனர்.

Tags : Passenger strike ,railway station ,Ratnagiri ,
× RELATED சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெளி மாநில பெண் மர்ம மரணம்..!!