×

பூட்யே கிடக்கும் ‘பாத்ரூம்’ பயணிகள் கடும் அவதி

பழநி, பிப். 5: பழநி ரயில் நிலையத்தில் காட்சிப்பொருளாக உள்ள கழிப்பறையால் பயணிகள் அவதியடைந்து வருகின்றனர். அறுபடை வீடுகளில் 3ம் படை வீடாக விளங்குவது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக பழநிக்கு ரயில் போக்குவரத்து ஏற்படுத்தப்பட்டுள்ளது. தற்போது பழநிக்கு மதுரை, திருச்செந்தூர், திருவனந்தபுரம், பாலக்காடு, சென்னை, திருச்செந்தூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகிறது.இந்த ரயில்கள் பழநி ரயில் நிலையத்தில் ஓரிரு நிமிடங்களே நின்று செல்கின்றன. ஆனால், ரயில் நிலைய நடைமேடையில் கட்டப்பட்டுள்ள கழிவறைகள் இதுவரை திறக்கப்படாமல் காட்சிப்பொருளாக மட்டுமே உள்ளன. இதனால் ரயில் நிலைய நுழைவாயிலில் இருக்கும் கட்டண கழிவறைக்கே செல்ல வேண்டி உள்ளது. நடைமேடையில் இருந்து ரயில் நிலைய நுழைவாயிலில் உள்ள கழிவறைக்கு செல்ல 10 நிமிடங்கள் ஆகிறது. ரயில் கிளம்பி விடும் என்பதால் பலர் அதனை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். நடைமேடையில் உள்ள மாற்றுத்திறனாளிகளின் கழிவறையும் இதுவரை திறக்கப்படவில்லை. எனவே, ரயில் நிலைய நடைமேடையில் காட்சிப்பொருளாக இருக்கும் கழிப்பறைகளை திறக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பயணிகளும், பக்தர்களும், மாற்றுத்திறனாளிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : boutique ,passengers ,bathroom ,
× RELATED அந்தமான் சென்ற விமானம் மோசமான வானிலை...