×

ஜிப்மரில் கண் மருத்துவர்கள் மாநாடு

புதுச்சேரி, பிப். 5:  இந்தியாவில் கண் அறுவை சிகிச்சை மருத்துவர்களின் மிகப்பெரிய சங்கமாக அகில இந்திய ஆப்தால்மோலாஜிகல் சொசைட்டி உள்ளது. இதில் 21,253 மருத்துவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இது உலகின் அதிக கண் மருத்துவர்களை உறுப்பினர்களாக கொண்ட 2வது பெரிய சங்கமாகும். இந்த சங்கத்தின் மருத்துவ ஆராய்ச்சி குழு சார்பில் இந்த ஆண்டின் ஒரு நாள் மண்டல மாநாடு ஜிப்மர் அப்துல் கலாம் கலையரங்கில் நடந்தது.
 ஜிப்மர் கண் மருத்துவ துறை தலைவர் சுபாஷினி கலியபெருமாள் வரவேற்றார். ஜிப்மர் இயக்குனர் ராஜேஷ் அகர்வால் மாநாட்டை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் சங்கர் படே, அகில இந்திய ஆப்தால்மோலாஜிகல் சொசைட்டியின் மருத்துவ ஆராய்ச்சிக் குழு சேர்மன் பார்தா பிஸ்வாஸ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

 இந்த மாநாட்டில், கண் புரை மற்றும் கண் அழுத்த நோய் குருட்டுத் தன்மை ஏற்படுவதற்கு முன்னனி காரணங்களாகும். இந்நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் பெரும்பான்மையினர் இந்நோய் குறித்து அறியாமல் இருக்கின்றனர். இதுகுறித்து சிறப்பு அமர்வுகளில் விவாதிக்கப்பட்டது. திறன் பரிமாற்ற அமர்வுகளில் கண் புரை மற்றும் கண்அழுத்த நோய் குறித்த காரணிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.  இளம் கண் மருத்துவர்கள் பயன்பெறும் வகையில் போலி கண்களை கொண்டு செயல்விளக்கம் அளிக்கப்பட்டது. கண்புரை, கண் அழுத்த நோய் குறித்து எழுந்த சந்தேகங்களுக்கு துறை நிபுணர்கள் விளக்கம் அளித்தனர். இதில் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் முதுநிலை மருத்துவ மாணவர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் ரமேஷ்பாபு நன்றி கூறினார்.

Tags : Ophthalmologists conference ,
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...