பெற்றோர் கவனிக்காததால் பாதை மாறும் சிறுமிகள்

திருப்பூர்,பிப்.2: படிக்கும் வயதில் அறியா பருவத்தில் ‘காதல்’ என்ற போர்வையில் தங்கள் காதலர்களுடன் ஓடிப்போய் தங்கள் எதிர்கால வாழ்க்கையை தொலைக்கும் மாணவிகளின் எண்ணிக்கை திருப்பூரில் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் தான் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எப்பொழுது பார்த்தாலும் வேலை, பணம் என்று அலையும் அவர்கள், தங்கள் மகள் என்ன செய்கிறாள்? எப்படி படிக்கிறாள் என்று கவனிப்பதும் இல்லை, கண்காணிப்பதும் இல்லை. இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டு படிக்கும் வயதில், சேரக்கூடாதவர்களுடன் சேர்ந்து தவறான வழிக்கு மாணவிகள் சென்று விடுகின்றனர். தங்களை யாரும் கண்டிப்பதில்லை, கண்காணிப்பதும் இல்லை என்ற தைரியத்தில் மாணவிகள் சிலர் தங்கள் ஆண் நண்பர்களுடன் பஸ் ஸ்டாப்புகளில் நின்றுகொண்டு மணிக்கணக்கில் பேசுவது, மொபைல் போனில் அவர்களை தொடர்பு கொண்டு பேசுவது என்று அத்துமீறி நடந்து கொள்கின்றனர். இதில் சில மாணவிகள் ஒரு படி மேலே சென்று விடுமுறை நாட்களில் கூட ‘ஸ்பெஷல் கிளாஸ்’ இருப்பதாக தங்கள் பெற்றோர்களை ஏமாற்றிவிட்டு, தங்கள் ஆண் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு, சினிமா, கோவில்கள் என்று சுற்றி திரிந்து வருகின்றனர்.  
 நாட்கள் செல்ல, செல்ல இவர்கள் பழக்கம் அதிகமாகி வீட்டை விட்டு ஓடிப்போகும் அளவுக்கு தங்களை மாற்றிக்கொள்கின்றனர். அத்தனை நாட்களும் தங்கள் மகளை கவனிக்காமல் அலட்சியமாக இருக்கும் பெற்றோர்கள் தங்கள் மகள் யாருடனாவது ஓடிப்போனவுடன் அலறியடித்து கொண்டு போலீஸ் நிலையத்திற்கு ஓடி வருகின்றனர்.

 அங்கு தங்கள் மகளை யாரோ கடத்தி சென்று விட்டதாக புகார் கொடுக்கின்றனர். பெற்றோர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் மகளிர் போலீசார் ஏராளமான மாணவிகளை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளனர். இதில் பெரும்பாலான மாணவிகள் 14 வயதுக்கும் குறைவானவர்கள் என்பது தான் அதிர்ச்சியாக உள்ளது. இந்நிலையில், திருப்பூரில் உள்ள பிரபல  மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 14 வயதுக்குட்பட்ட 3 மாணவிகள், பள்ளி சீருடையுடன், சுமார் 20 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவருடன், நேற்று முன்தினம் ஊத்துக்குளி ரோடு ரயில்வே பாலம் அருகே உள்ள புதர் நிறைந்த மறைவான பகுதிக்கு சென்றுள்ளனர். இதை கவனித்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு சத்தம் போட்டுள்ளனர். இதை பார்த்து பயந்து போன அவர்களில் அந்த வாலிபரும், ஒரு மாணவியும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மற்ற இரு மாணவிகள் பொதுமக்களிடம் பிடிபட்டனர். பொதுமக்கள் அந்த விசாரித்தபோது, அந்த வாலிபர் யாரென்றே தெரியாது என்று பொய் சொல்லி தப்பிக்க முயன்றனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அந்த மாணவிகளின் பெற்றோர் செல்போன் எண்ணை கேட்டு வாங்கியுள்ளனர். பின்னர் ஒரு மாணவியின் தந்தைக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வரவழைத்துள்ளனர். ஆனால், அங்கு வந்த மாணவியின் தந்தையோ மது போதையில் இருந்துள்ளார். இதுபோன்ற ஆட்களிடம் சொல்லி என்ன பயன் என நினைத்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.   சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், நடந்த சம்பவத்தை கேட்டு தலையில் அடித்துக்கொண்டனர். பின்னர் அந்த மாணவிகளை கடுமையாக எச்சரித்ததோடு, புத்திமதிகளையும் சொல்லி அங்கிருந்து அனுப்பி வைத்தனர். மாணவிகளின் இந்த செயல் அங்கிருந்த பொதுமக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளை ஓரளவுக்குதான் கண்காணிக்க முடியும். பெற்றோர்கள் தான் தங்கள் குழந்தைகள் மேல் அக்கறை செலுத்தி கண்காணிக்க வேண்டும். பணம் சம்பாதிக்க வேண்டியது அவசியம் தான், ஆனால் தங்கள் மகனோ, மகளோ எப்படி படிக்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்று கொஞ்சமாவது அவர்கள் மேல் அக்கறை எடுத்து பெற்றோர்கள் கவனிக்க வேண்டும் என்கின்றனர் போலீசார்.

× RELATED கூத்தாநல்லூர்- பாண்டுக்குடி இணைப்பு...