×

5 ஆண்டுகளாக பூட்டிக்கிடக்கும் அந்தியூர் எம்எல்ஏ அலுவலகம்

ஈரோடு, பிப். 2:  அந்தியூர் அருகே உள்ள அண்ணாமடுவு என்ற இடத்தில் 2001ம் ஆண்டு ரூ.20 லட்சம் செலவில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் கட்டப்பட்டது. 2013ம் ஆண்டு வரை இந்த அலுவலகம் பயன்பாட்டில் இருந்து வந்தது. 2013ம் ஆண்டு  அதிமுக எம்எல்ஏ ரமணீதரன் பதவி வகித்த போது நள்ளிரவில் மர்ம நபர்கள் எம்எல்ஏ அலுவலத்திற்கு தீ வைத்தனர். இதில், சில ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.இந்த தீ வைப்பு சம்பவத்திற்கு பிறகு வாஸ்து சரியில்லை என்று கூறி எம்எல்ஏ அலுவலகத்திற்கு வருவதை ரமணீதரன் தவிர்த்தார். இதனால், 2013ல் மூடப்பட்ட எம்எல்ஏ அலுவலகம் தற்போது வரை திறக்கப்படாமல் உள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளை எம்எல்ஏவிடம் தெரிவிக்க வழியில்லாமல் தவித்து வருகின்றனர். ரமணீதரனின் வாஸ்து சென்டிமென்ட்ைட தற்போதைய எம்எல்ஏ.,வான ராஜாகிருஷ்ணன் தகர்த்தெறிவார் என்று நினைத்த மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
எம்எல்ஏ அலுவலகம் தொடர்ந்து பூட்டி கிடப்பதால் பகலிலும், இரவிலும் குடிமகன்கள் கும்மாளம் அடிக்கும் இடமாகவே மாறிவிட்டது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எம்எல்ஏவை சந்திக்க வேண்டுமென்றால் அந்தியூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை பயணியர் மாளிகைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,`எம்எல்ஏ அலுவலகம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதாக கூறி எம்எல்ஏ வருவதில்லை. எம்எல்ஏ சந்திக்க வேண்டுமெனில் நெடுஞ்சாலைத்துறை விடுதிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மக்களின் குறைகளை கேட்டறியவும், பொதுமக்களை எளிதில் சந்திக்கவும் கட்டப்பட்ட அலுவலகம் பயன்பாடு இல்லாமல் மது அருந்தும் இடமாக மாறிவிட்டது.
 பல லட்சம் செலவிடப்பட்டு கட்டப்பட்ட கட்டிடம் பாழடைந்து வருகிறது. முன்னாள் அதிமுக எம்எல்ஏ ரமணீதரன் அவ்வப்போது அலுவலகத்திற்கு வந்து செல்வார். ஆனால், தற்போதைய எம்எல்ஏ பதவியேற்றதில் இருந்து ஒருமுறை கூட எம்எல்ஏ அலுவலகத்திற்கு வந்ததில்லை’ என்றனர்.

Tags : office ,Attiyur MLA ,
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...