×

ஓமலூர் சந்தையில் ஒரேநாளில் ₹10 கோடி வர்த்தகம் மானிய திட்டத்திற்காக மாடுகள் விற்பனை அமோகம்


ஓமலூர், பிப்.2:  சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, பெருமாள்கோவில் மாட்டுச்சந்தை நேற்று கூடியது. கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலுங்கானா, ஒடிசா போன்ற பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளை கொண்டு வந்திருந்தனர். சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் மற்றும் மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 120 எருமைகள், 270 கலப்பின மாடுகள், 180 கன்றுகள், 350 ஜெர்சி மாடுகள், 300 காளைகள் கன்றுகள் உள்பட சுமார் இரண்டாயிரம் மாடுகள் குவிக்கப்பட்டன. இதில், எருமைகள் ₹18 ஆயிரம் முதல் ₹35 ஆயிரம் வரையும், கறுப்பு வெள்ளை மாடுகள் ₹24 ஆயிரம் முதல் ₹42 ஆயிரம் வரையும், ஜெர்சி பசுக்கள் ₹22 ஆயிரம் முதல் ₹48 ஆயிரம் வரையும், சிந்து மாடு ₹16 ஆயிரம் முதல் ₹42 ஆயிரம் வரையும், நாட்டுமாடுகள் ₹40 ஆயிரம் முதல் ₹74 ஆயிரம் வரையும் விற்பனை செய்யப்பட்டது. இளம் கன்றுகள் ₹3 ஆயிரம் முதல் ₹10 ஆயிரம் வரை விலை போனது.

கேரளா மற்றும் மஹாராஷ்டிராவில் அரசின் மாடு வழங்கும் திட்டத்தில், மானிய விலையில் மாடுகளை தேர்வு செய்தனர். அதேபோல், 450க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. 10 கிலோ எடை கொண்ட வெள்ளாடு ₹4,500 முதல் ₹5,000 வரையும், ஐந்து கிலோ முதல் 10 கிலோ எடை வரையிலான செம்மறி ஆடு ₹3,500 முதல் ₹4,000 வரையும் விற்பனையாகின. ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மொத்தம் ₹10 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரத்தை விட, அதிக எண்ணிக்கையில் மாடுகள் கொண்டு வரப்பட்டன. ₹1,000 ரூபாய் ₹2,000 வரை கூடுதல் விலை கிடைத்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Tags : Omanur ,Rs ,
× RELATED சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை...