×

காக்களூர் அரசு நிலத்தில் இருந்த 25 வீடுகளின் மின்சாரம் துண்டிப்பு

திருவள்ளூர், பிப் 2: திருவள்ளூர் அடுத்த காக்களூர் அன்னை தெரசா நகரில், அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து கட்டியிருந்த 25 வீடுகளின் மின்சாரத்தை அதிகாரிகள் துண்டித்தனர். இதை கண்டித்து, அப்பகுதி மக்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்களது ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டைகளை திரும்ப ஒப்படைப்பதாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருவள்ளூர் அடுத்த காக்களூர் ஊராட்சியில் அன்னை தெரசா நகர் உள்ளது. இங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில், தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த 25 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.
 
இவர்கள்,தங்களது வீடுகளுக்கு பட்டா வழங்கக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்த நிலையில், நேற்று முன்தினம் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, காக்களூர் மின்வாரிய அதிகாரிகள், 25 வீடுகளின் மின்சாரத்தை துண்டித்தனர். இதனால், அக்குடும்பத்தினர் இருட்டில் வசிப்பதாகவும், விஷ பூச்சிகளால் அவர்களது உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளதாகவும், பிள்ளைகளின் படிப்பு பாதிப்பதாகவும், உடனடியாக துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை வழங்கவேண்டும் என கூறி, 100க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.  இல்லையேல், தங்களது ரேஷன், கார்டு, வாக்காளர் அட்டைகளை ஒப்படைப்பதாக கூறி கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர், மனுமீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர்.

Tags : Kathakulam ,government ,houses ,
× RELATED குமரி முழுவதும் பரவலாக சாரல் மழை: மேலும் 6 வீடுகள் இடிந்து விழுந்தன