×

பிரேக் போட்டபோது விழுந்து முதுகு தண்டுவடம் பாதிப்பு ¬ பெண்ணுக்கு இழப்பீடு வழங்காத அரசு பஸ் பெரம்பலூரில் ஜப்தி

பெரம்பலூர், ஜன.31:  பஸ்சில் பிரேக் போட்டபோது முன்னால் வந்து விழுந்த பெண்ணிற்கு முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதால் பெண்ணிற்கு  இழப்பீடு வழங்காத அரசு பஸ் பெரம்பலூரில் ஜப்தி செய்யப்பட்டது.  பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூர் பேரூராட்சி  அ.மேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் நந்திகேஸ்வரன். இவரது மனைவி நீலாம்பாள்(57). கடந்த 2013ம் ஆண்டு சேலம் சென்ற இருவரும், அங்கிருந்து விழுப்புரம்  செல்லும் பஸ்சில் ஏறினர். ஆத்தூர் வந்த தம்பதியினர், அங்கிருந்து பெரம்பலூர் பஸ்சில் ஏற  முடிவு செய்தனர். இதன்படி சேலத்திலிருந்து ஆத்தூருக்கு வரும் வழியில்  பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் வேகத்தடையில் டிரைவர் எதிர்பாராமல் திடீர் பிரேக் போட்டதால் பின்னால் இருந்து தூக்கி வீசப்பட்ட நீலாம்பாள்  முன்னால் வந்து விழுந்துள்ளார். இதில் அவரது முதுகுத் தண்டுவடம்  முறிந்துள்ளது.

 விபத்து ஏற்பட காரணமான சம்மந்தப்பட்ட விழுப்புரம் கோட்ட  அரசு போக்கு வரத்துக்கழகம் தனக்கு இழப்பீடு வழங்கிட வேண்டும் என  பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நீலாம்பாள் மனு தாக்கல்  செய்திருந்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு சம்மந்தப்பட்ட அரசு போக்குவரத்துக்கழகம் ரூ1.60,650ஐ இழப்பீடாக வழங்கிட உத்தரவிட்டார்.  ஆனால் அரசு போக்குவரத்து கழகம் கண்டுகொள்ளாமல் இருந்த காரணத்தால்,  நீலாம்பாள் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரி மனு தாக்கல்  செய்தார்.  மனுவை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி(பொ)விஜயகாந்த், சம்மந்தப்பட்ட அரசு போக்குவரத்துக்கழகம்  பாதித்த நபருக்கு வட்டியுடன் சேர்த்து ரூ.1,66,635ஐ இழப்பீட்டு தொகையாக  வழங்க வேண்டும். அதற்காக விழுப்புரம் கோட்ட அரசு பஸ்சினை ஜப்தி செய்து  நீதிமன்றம் முன் நிறுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
 இதனை தொடர்ந்து  நேற்று மதியம் விழுப்புரத்திலிருந்து திருச்சி நோக்கி சென்ற அரசு  போக்குவரத்துக்கழக பஸ் ஒன்றை கோர்ட் அமீனா ஜப்தி செய்து பெரம்பலூர் நீதிமன்றம்  முன்பு நிறுத்தினர்.

Tags : Jatti ,Perambalur ,
× RELATED குழந்தை திருமணம் செய்து வைத்தால்...