×

அரசு மருத்துவமனை கண் சிகிச்சை பிரிவில் பரிசோதனை மட்டுமே உண்டு அறுவை சிகிச்சை இல்லை

அருப்புக்கோட்டை, ஜன. 31: அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில், பரிசோதனை மட்டுமே செய்வதால், கண்சிகிச்சை பிரிவு களையிழந்து வருகிறது. பல லட்சக்கணக்கான ரூபாயில் கட்டப்பட்ட கட்டிடம் காய்ச்சல் பிரிவாக மாறி வருகிறது. அருப்புக்கோட்டையில் பந்தல்குடி ரோட்டில் அரசு மருத்துவமனை உள்ளது. தேசிய தரச்சான்று பெற்ற இந்த மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, காசநோய் பிரிவு, கண்சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. கண் சிகிச்சைக்கு என தனியாக ஒரு பிரிவு உள்ளது. இதில், 16 படுக்கைகள் மற்றும் பார்வை பரிசோதனை, கண்ணீர் அழுத்த பரிசோதனை, கண்ணீர் பை பரிசோதனை, கண் விழித்திரை பரிசோதனை, கண்புரை அறுவை சிகிச்சை, கண்புரை அறுவை சிகிச்சை செய்து லென்ஸ் பொருத்துதல், பார்வை நிறமி பரிசோதனை செய்ய வசதிகள் உள்ளன. நகரைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கண் பரிசோதனை மற்றும் கண் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு இங்கு வந்து செல்கின்றனர். தினமும் 5க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு மேலாக கண் அறுவை சிகிச்சை நடைபெறவில்லை. இங்குள்ள கண் டாக்டர் கண் பரிசோதனை மட்டும் செய்கிறார். அறுவை சிகிச்சைக்கு வருபவர்கள் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால், கண் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது. அறுவை சிகிச்சை அரங்கில் உள்ள உபகரணங்கள் காட்சிப்பொருளாக உள்ளன. தற்போது இந்த வார்டை, காய்ச்சல் பிரிவாக மாற்றி விட்டனர். லட்சக்கணக்கில் செலவழித்து கண் சிகிச்சைக்காக கட்டப்பட்ட கட்டிடம், அறுவை சிகிச்சை அரங்கு உட்பட பல வசதிகள் இருந்தும் கண் சிகிச்சை பிரிவில் தற்போது பரிசோதனை மட்டுமே செய்யப்படுகிறது.எனவே, மாவட்ட நிர்வாகம், கண் அறுவை சிகிச்சை செய்யும் அனுபவம் மிக்க மருத்துவரை பணியில் அமர்த்தி, அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED புதிரை வண்ணார் சமூகத்தினர் சாதிச்சான்றிதழ், ஆதார் பெற சிறப்பு முகாம்