×

பனப்பாக்கம் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

பண்ருட்டி, ஜன. 30: பண்ருட்டி அருகே தொரப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பனப்பாக்கம் சாலை உள்ளது. இச்சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருந்து வந்தது. அப்போதைய மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் இந்த சாலையை ஆய்வு செய்து உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் துவங்கியது. ஆனால் விரைவிலேயே சாலை சேதமடைந்ததால் அந்த வழியாக செல்லும் பள்ளி மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலையை சீரமைப்பதற்கு அதிகாரிகள் முன்வரவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் புதுப்பேட்டை சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் சார்பில் புதுப்பேட்டை பனப்பாக்கம் சாலையை சீரமைத்திட வலியுறுத்தி சாலை மறியல் செய்யப்போவதாக அறிவித்தனர். இதையடுத்து நேற்று சங்கத்தலைவர் பத்மநாபன், துணைத்தலைவர் செல்வம், முத்துக்குமரன், செயலாளர் செல்வரத்தினம் மற்றும் கிராம பொதுமக்கள் என சுமார் 50க்கும் மேற்பட்டோர் புதுப்பேட்டை மெயின் ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் வீரமணி, அண்ணாகிராமம் பிடிஓ கிருஷ்ணமூர்த்தி, உதவி பொறியாளர் ஜெய்சங்கர், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில் சாலையை சீரமைப்பதற்கு ரூ.33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கப்பட உள்ளது என பிடிஓ கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



Tags : road ,blockade ,
× RELATED ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பராமரிப்பு புதுப்பொலிவு பெற்ற கரிசல்குளம் சாலை