×

பாலக்கோடு அருகே மஞ்சு விரட்டு கோலாகலம்

பாலக்கோடு, ஜன.25: பாலக்கோடு அருகே சூடனூர் கிராமத்தில் நேற்று மஞ்சுவிரட்டு நடந்தது. இதில் 200க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன. பொங்கல் விழாவின் போது, தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டும், கொங்கு மண்டலத்தில் ரேக்ளா ரேசும், வடமாவட்டங்களான தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் எருதாட்டம், மஞ்சுவிரட்டு நடப்பது வழக்கம். இந்நிலையில், பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி அருகே உள்ள சூடனூர் கிராமத்தில், நேற்று மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இதில், பஞ்சப்பள்ளி, பாளையம், நமாண்டஅள்ளி, மாரண்டஅள்ளி, சாமனூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த காளைகள் கொண்டு வரப்பட்டன. இந்த காளைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை செய்தனர். பின்னர், அவற்றுக்கு புனித நீர் தெளித்து, வாடிவாசல் வழியாக மைதானத்தில் ஓட விடப்பட்டன. கூட்டத்தை கண்டு மிரண்டு சீறிப்பாய்ந்த காளைகளை கண்டு கிராம மக்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.  இந்த நிகழ்ச்சியில், சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 200 காளைகள் அழைத்து வரப்பட்டன. இதில், குறிப்பிட்ட இலக்கை குறைந்த நேரத்தில் கடந்த காளைகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. மஞ்சுவிரட்டை கண்டு ரசிக்க, பெண்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இதையொட்டி, பஞ்சப்பள்ளி போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags : Manchu ,balcony ,
× RELATED கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்