×

திருப்பூர் மாநகரில் தேங்கும் கழிவுகளால் சுகாதாரக்கேடு

திருப்பூர், ஜன. 24:  நாட்டிற்கு அந்நிய செலவாணி ஈட்டித்தருவதில் முக்கிய பங்காற்றும் திருப்பூர் மாநகரில் முக்கியமான கட்டமைப்பு வசதியான சுகாதாரத்தை பேணி பராமரிக்க மாநகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காததால், பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பின்னலாடை தொழிலில் உலக அளவில் பிரசித்தி பெற்றுள்ள திருப்பூர் மாநகரம், ஆண்டுக்கு சுமார் ரூ.25 ஆயிரம் கோடி அளவுக்கு பின்னலாடைகளை ஏற்றுமதி செய்து வருகிறது. மேலும், ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு உள்நாட்டு பின்னலாடைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஆனால், நகரில் அடிப்படை சுகாதார பணிகள் நகராட்சி அளவிலேயே இன்னும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகராட்சியில் தற்போது 60 வார்டுகள் உள்ளது. இந்த 60 வார்டுகளிலும் உள்ள வீடுகள், பின்னலாடை தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வியாபார நிறுவனங்களில் இருந்து தினமும் சுமார் 540 டன் குப்பை சேகரமாகிறது.
இந்த குப்பைகள் 250 வீடுகளுக்கு 3 சுகாதார தொழிலாளர்கள் என்ற வீதத்தில் அள்ள வேண்டும். ஒருவர் குப்பை சேகரிக்க, ஒருவர் குப்பை அள்ள, ஒருவர் சாக்கடை கால்வாய் தூர்வார என்ற அடிப்படையில் பணியாளர்கள் அரசால் நியமிக்கப்படுவர். ஆனால், திருப்பூரில் 2 ஆயிரம் சுகாதார தொழிலாளர்கள் தேவையுள்ள நிலையில் சுமார் 1,200 தொழிலாளர்கள் மட்டுமே உள்ளனர். இதை சரிக்கட்ட சில ஆண்டுகளுக்கு முன்பு 2-வது மற்றும் 3-வது மண்டலங்களுக்கு உட்பட்ட 16-வது வார்டு முதல் 45-வது வார்டு வரை உள்ள 30 வார்டுகளில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு விடப்பட்டது. ஆனால் இதிலும் எந்தவிதமான பிரயோஜனமும் ஏற்படவில்லை. மாநகர வளர்ச்சியின் காரணமாகவும், அளவுக்கதிகமாக குப்பைகள் சேருவதாலும் முழுமையாக குப்பைகளை அள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், திருப்பூரின் பல்வேறு பகுதிகளில் குப்பைகள் தேங்கி, சாக்கடை கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால், கொசு உற்பத்தி, தொற்று நோய் அபாயம் நிலவுகிறது. மாநகரம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள் முதல் சாலைகள் வரை ஆங்காங்கே குப்பைகள் மலைபோல் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. ஆனால் குப்பை பிரச்னைக்கு தீர்வு காணாமல், திருப்பூரை தூய்மைமிகு மாநகராட்சியாக மாற்றுகிறோம் என விளம்பரம் செய்துகொண்டு, மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஆங்காங்கே விழிப்புணர்வு பதாகைகளும், எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இதில், பல இடங்களில் குப்பை தொட்டிகள் வைக்கப்படாத நிலையில், குப்பைகளை தொட்டியில் தான் போட வேண்டும், மீறுபவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என எச்சரிக்கை பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.ஆனால் மாநகராட்சி நிர்வாகமோ எதையும் கண்டுகொள்வதாக தெரியவில்லை.
 இதனால் தற்போது முக்கிய ரோடுகளிலும் குப்பைகள் மலைபோல் தேங்கி கிடக்கிறது. இது பொதுமக்கள் மத்தியில், மாநகராட்சி நிர்வாகம் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளிலும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் மிகவும் பின் தங்கிய நிலையிலேயே உள்ளது. திருப்பூர் மாநகரில் முக்கியமான கட்டமைப்பு வசதியான சுகாதாரத்தை பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கின்றனர்.

Tags : city ,Tirupur ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்