×

அரசு மருத்துவமனையில் `டாக்டர் ரவுண்ட்ஸ்’ நேரத்தில் விரட்டாதீங்க...

மதுரை, ஜன.22: அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் ரவுண்ட்ஸ் வரும்போது, நோயாளியின் உறவினர் ஒருவர் உடனிருந்து, நோயாளியின் கஷ்டங்களை தெளிவாக கூற அனுமதிக்க வேண்டும்; விரட்டக்கூடாது என்று உறவினர்கள் வலியுறுத்தி உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கும் உள் நோயாளிகளை தினமும் டாக்டர்கள் பரிசோதித்து, மருந்து மாத்திரைகளை எழுதித்தருவது, தேவையான பரிசோதனைகளை மேற்கொள்ள குறிப்பு எழுதுவது வழக்கம். இந்த `டாக்டர் ரவுண்ட்ஸ்’ நேரத்தில் மருத்துவமனையே பரபரப்பாகிவிடுகிறது. ``டாக்டர் வரப்போறார். எல்லோரும் வெளியே போங்க’’ என்று நோயாளிகளுடன் இருக்கும் உறவினர்கள் விரட்டியடிக்கப்படுகின்றனர். `டாக்டரிடம் பேசவேண்டும்’ என்று உறவினர்கள் கேட்டால், ரவுண்ட்ஸ் நேரத்தில் பேசமுடியாது என்று கறாராக கூறிவிடுகின்றனர். மதுரை அரசு மருத்துவமனையில் இந்த கெடுபிடி சற்று அதிகமாகவே உள்ளது.

இம்மருத்துவமனையில் சிகிச்சை பெறும் திருமங்கலம் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்த ராமசாமி கூறுகையில், ``என் தந்தைக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு, வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். ரவுண்ட்ஸ் வரும் டாக்டரிடம், தனது உடல்நிலை குறித்து அவரால் தெளிவாக சொல்லமுடியவில்லை, உறவினர்கள் இருக்கக்கூடாது எனக்கூறி என்னை விரட்டிவிட்டனர். சரி டாக்டர் வெளியே வரும்போது சொல்லலாம் என்று காத்திருந்தால், சில டாக்டர்கள் மட்டுமே காதுகொடுத்து கேட்கின்றனர். சிலர் கண்டுகொள்ளாமல் அலட்சியம் செய்கின்றனர். இதனால் நோய் குறித்து முழு தகவலை டாக்டரிடம் சொல்ல முடியவில்லையே என்ற வேதனைதான் மிஞ்சுகிறது’’ என்றார்.

முதுநிலை மருத்துவர் ஒருவர் கூறுகையில், ``இந்த பிரச்சனை, அரசு மருத்துவமனைக்கு வரும் வெளிநோயாளிகள் முதல் சிகிச்சையில் உள்ள உள்நோயாளிகள் வரை அனைவருக்கும் உள்ளது. டாக்டர் ரவுண்ட்ஸ் வரும்போது, நோயாளிகள் இருக்கக்கூடாது என்று இந்திய மருத்துவக்கவுன்சில் விதிகளில் கிடையாது. உறவினர்களை அனுமதித்தால், அனைவரும் நோயாளியை பற்றி கருத்து தெரிவிப்பர். நேரம் போய்விடும் என்பதால்தான் இந்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் தெளிவாக பேசமுடியாத நோயாளிகளின் உறவினர்களை இருக்க அனுமதிக்கலாம்’’ என்றார்.

சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘‘இனிவரும் காலங்களிலாவது நோயாளிகளுடன் உறவினர் ஒருவர் உடனிருந்து, ரவுண்ட்ஸ் வரும் டாக்டரிடம், நோயாளி குறித்தும் நோய் குறித்தும் கூறுவதற்கு அனுமதிக்க வேண்டும். இப்படி செய்தால், ேநாய் குறித்து டாக்டரிடம் கூறிவிட்டோம் என்ற மனநிலையில் உறவினர்கள் திருப்தி அடைந்துவிடுவர். இது நோயாளி விரைவில் குணமடைய ஒரு வாய்ப்பாகவும் அமையும்’’ என்றனர்.

Tags : Doctor Rounds ,Government Hospital ,
× RELATED பாளையங்கோட்டை சிறைக் கைதி தப்பி ஓட்டம்