×

மத்திய அரசை கண்டித்து பந்த் போராட்டம் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுச்சேரி, ஜன. 9: புதுச்சேரியில் மத்திய அரசுக்கு எதிராக தொழிற்சங்கத்தினர் நடத்திய பந்த் காரணமாக கடைகள் மட்டுமின்றி பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டன. பஸ், ஆட்டோக்கள் ஓடவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மத்திய பாஜக அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிற்சங்க உரிமைகளை பறிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு தழுவிய அளவில் 11 தொழிற்சங்கங்கள் 2 நாள் (ஜன.8, 9 தேதிகள்) வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தன. புதுவையில் 8ம்தேதி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஐஎன்டியுசி, ஏஐடியுசி, சிஐடியு, தொமுச உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்தன. இதற்கு திமுக, இடதுசாரிகள் மட்டுமின்றி வி.சிறுத்தைகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.அதன்படி புதுவையில் நேற்று பந்த் போராட்டம் நடைபெற்றது. 500க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் மட்டுமின்றி பிஆர்டிசி பஸ்களும், மினி பஸ்களும் ஓடவில்லை. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடியது. தமிழக பகுதிகளுக்கு மிக குறைவான தமிழக அரசு பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.பஸ் நிலையத்தில் இருந்து மாநில எல்லை வரை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் தமிழக அரசு பஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.ேபாராட்டம் தீவிரமடைந்த நிலையில் தமிழகத்தில் இருந்து வந்த வாகனங்கள் ெபரும்பாலும் மாநில எல்லையிலேயே பயணிகளை இறக்கி விட்டு சென்றன. என்ஆர் காங்கிரஸ், பாஜக, பாமக, அதிமுக உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காத நிலையில் மிக குறைவான ஆட்டோக்கள் மட்டும் ஓடின. பெரும்பாலான ஆட்டோ, டெம்போக்களும் ஓடவில்லை.
இதுதவிர நகர பகுதிகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் மட்டுமின்றி மார்க்கெட்டுகளும் அடைக்கப்பட்டன. வணிக நிறுவனங்களும் திறக்கப்படவில்லை. இதனால் குபேர் அங்காடி, நேரு வீதி, காந்திவீதி உள்ளிட்டவை ஆள்நடமாட்டமின்றி காணப்பட்டது. பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டதால், இருசக்கர வாகனங்களில் வந்த பொதுமக்கள் எரிபொருள் நிரப்ப முடியாமல் அவதிக்குள்ளாகினர்.
அரசு அலுவலகங்கள், அரசு பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கின. இருப்பினும் அங்கு குறைவான ஊழியர்கள், மாணவர்களே வந்திருந்தனர். ஆனால் தனியார் பள்ளிகள் நேற்று இயங்கவில்லை.
 இதுதவிர பந்த் போராட்டத்தை அறிவித்த தொழிற்சங்கத்தினர் மட்டுமின்றி திமுக, இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளும், அமைப்புகளும் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு ஆயிரக்கணக்கானோர் கைதாகினர். இந்திய யுனைடெட் அமைப்பினரும் ரயில் மறியலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டனர்.
 முழு அடைப்பு காரணமாக புதுவையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அசம்பாவிதத்தை தடுக்க டிஜிபி சுந்தரி நந்தா உத்தரவின்பேரில் எஸ்பிக்கள் மாறன் (கிழக்கு), ஜிந்தா கோதண்டராமன் (வடக்கு), அப்துல் ரஹிம் (தெற்கு), ரங்கநாதன் (மேற்கு) ஆகியோர் தலைமையில் நகரம், கிராமப்புறங்களில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போராட்டங்களில் ஈடுபட்டவர்களை போலீசார் உடனுக்குடன் கைது செய்து அப்புறப்படுத்தினர்.
பாகூரில் மறியல்: பெண்கள் உள்பட 70 பேர் கைது
பாகூர்: விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி, தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் செய்ய மறுப்பது உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. இந்த வேலை நிறுத்தத்ததுக்கு மாநில அரசு ஊழியர் சங்கங்கள், போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் மற்றும் வணிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் புதுவையில் நேற்று இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.  இதே போன்று பாகூர் தொகுதியில் கன்னியக்கோவில், பாகூர் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. அனைத்து கட்சி தொழிற்சங்கம் சார்பில் பாகூர் பூலோக மாரியம்மன் கோயில் எதிரே மறியல் போராட்டம் நடைபெற்றது. மறியலில் ஈடுபட்ட 17 பெண்கள் உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஏம்பலத்தில் பாதிப்பில்லை: புதுவை மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் நேற்று கடைகள், வணிக நிறுவனங்கள், பெட்ரோல் பங்க்குகள் அடைக்கப்பட்டிருந்த நிலையில், ஏம்பலம் தொகுதியில் மட்டும் பெரும்பாலான கடைகள் திறந்து இருந்தன. இங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரிகள் வழக்கம்போல் செயல்பட்டன. தனியார் தொழிற்சாலைகள் இயங்கின.

அரசு ஊழியர்கள் போராட்டம்
புதுவை அரசு சம்மேளன ஊழியர்கள் சங்கத்தினர் கட்டாய விடுப்பு எடுத்து தலைமை தபால் நிலையம்  தர்ணா போராட்டம் நடத்தினர். பாலமோகனன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
அரசு  ஊழியர் மத்திய  கூட்டமைப்பினர் லட்சுமணசாமி தலைமையில் கம்பன் கலையரங்கம்  முன்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  ஊழியர்கள் வேலைநிறுத்தத்தால் மத்திய அரசு நிறுவனமான தபால்துறை,  பிஎஸ்என்எல்  மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிகள் பாதிக்கப்பட்டது.  பொதுத்துறை வங்கிகளும்  போராட்டத்தில் கலந்து கொண்டதால் ரூ.300 கோடி வரை  பணபரிவர்த்தனை  பாதிக்கப்பட்டது.


Tags : government ,Pandav Bhattacharya ,
× RELATED பாவூர்சத்திரம் அரசு ஆண்கள் பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா?