கொடைக்கானல், ஜன. 8: சொத்தை பிரித்து தராத ஆத்திரத்தில் கொடைக்கானலில் மாமனாரை கோடாரியால் வெட்டிய மருமகனை போலீசார் கைது செய்தனர்.கொடைக்கானல் நாயுடுபுரம் பெரும்பள்ளத்தை சேர்ந்தவர் ஜான்தாசன். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு சொந்தமாக அதே பகுதியில் 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை பிரித்து வருவதில் தம்பதிக்கும், இவர்களது மகளை திருமணம் செய்த ராஜனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ராஜன் தனது மாமனாரிடம் நிலத்தை பிரித்து தர வேண்டும் என தகராறு செய்ததாக கூறப்படுகிறது. தகராறு முற்றியதில் ராஜன் தான் கொண்டு வந்த கோடாரியால் ஜான்தாசனை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த அவரை சிகிச்சைக்காக கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து முருகேஸ்வரி அளித்த புகாரின்பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்குப்பதிந்து ராஜனை கைது செய்தனர். மேலும் இவருக்கு உடந்தையாக இருந்த உறவினர்கள் சுசீந்திரராஜ், சாலமன், ரகுராமன் மீதும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
