×

ரபி பருவ பயிர்களை காப்பீடு செய்ய கடைசி தேதி அறிவிப்பு

கடலூர், ஜன. 4:  கடலூர் மாவட்டஆட்சியர்
அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
நடப்பு ரபி பருவத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு செய்யப்பட்டு வருகிறது. இதில் உளுந்து, பச்சைப்பயிர், மக்காச்சோளம், கம்பு, மணிலா மற்றும் எள் பயிர்கள் காப்பீடு செய்ய வரும் 15ம் தேதி கடைசி நாளாகும். நவரை பருவ நெல் பயிர் காப்பீடு செய்ய பிப்.15ம் தேதி கடைசி நாளாகும். பருத்தி பயிர் காப்பீடு செய்ய கடைசி பிப். 28ம் தேதி கடைசி நாளாகும். பொதுவாக பயிர் காப்பீடு செய்ய கிராம நிர்வாக அலுவலரால் வழங்கும் வருவாய் துறை அடங்கல் சான்றுக்கு பதிலாக உதவி வேளாண்மை அலுவலர் வழங்கும் விதைப்பு சான்றிதழ் போதுமானது. பயிர் காப்பீடு செய்ய சில நாட்களே உள்ள சூழ்நிலையில் இதுவரை பயிர் காப்பீடு செய்யாத விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதி உதவி வேளாண்மை அலுவலரை அணுகி விதைப்பு சான்று பெற்று உடன் பயிர் காப்பீடு செய்துகொள்ள வேண்டும்.  

இத்திட்டத்தின் கீழ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் தேசிய வங்கி மூலமாக கடன் பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள், கடலூர் மாவட்டத்தில் பொது சேவை மையங்கள்  மூலமாகவும், வங்கிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவும் விருப்பத்தின் பேரில் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். பயிர் காப்பீட்டு தொகையாக விவசாயிகள் நெற்பயிருக்கு ஏக்கருக்கு ரூ.405, உளுந்து பயிருக்கு ரூ.215, மக்காச்சோளம் பயிருக்கு ரூ.255, கம்பு பயிருக்கு ரூ.80, மணிலா பயிருக்கு ரூ.339, எள் பயிருக்கு ரூ.102 மற்றும் பருத்தி பயிருக்கு ரூ.965 செலுத்தினால் போதுமானது. இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படக்கூடிய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டிட விவசாயிகள் அனைவரும் உடன் பயிர் காப்பீடு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

Tags : Rabi ,
× RELATED பயிர் காப்பீடு செய்ய நாளை கடைசி