×

செண்பகராமன்புதூரில் பென்சன் வாங்கி தருவதாக பெண்ணிடம் நூதன மோசடி

ஆரல்வாய்மொழி, ஜன. 4: செண்பகராமன்புதூர் அருகே விதவை பென்சன் வாங்கி தருவதாக கூறி பெண்ணிடம் நூதன முறையில் ஏமாற்றி சென்ற இரண்டு மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.குமரி மாவட்டம் செண்பகராமன்புதூர் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி(48). இவரது கணவர் செல்வராஜ் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ளார். ராஜேஸ்வரி நெசவாளர் காலனி அருகே உள்ள ஒரு கம்பேனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டுக்கு நேற்று முன்தினம் இரண்டு பேர் பைக்கில் வந்தனர். வீட்டில் அவரது மகன் மட்டும் இருந்தார். அவரிடம் உனது அம்மாவுக்கு பென்சன் வாங்கி தருவதற்காக வந்துள்ளோம்.  உடனே உன் அம்மாவை வர சொல் என அவர்கள் கூறியுள்ளனர். இதனையடுத்து ராஜேஸ்வரி வீட்டுக்கு விரைந்து வந்துள்ளார். அவரிடம் பைக்கில் வந்த நபர்கள், உங்களுக்கு பென்சன் வாங்கி தருவதற்காக வந்துள்ளோம். நாங்கள் செண்பகராமன்புதூரில் வங்கியில் தான் வேலை பார்க்கிறோம் என கூறியவர்கள் வங்கி கணக்கு புத்தகத்தை காண்பிக்குமாறு கூறியுள்ளனர். ராஜேஸ்வரி வங்கி கணக்கு புத்தகத்தினை எடுத்து கொடுத்ததும், இதில் பணம் இல்லை. இந்த வங்கி கணக்கில் ₹ 14500 நாளை வந்து விடும். உங்கள் வங்கி கணக்கில் பணம் இல்லாததால் உடனடியாக ₹2680 கட்ட வேண்டும். காலையில் வங்கி முன்பு வந்தால் பணம் கிடைக்கும் என கூறியவர்கள், பச்சை இங்கில் பேப்பரில் தொகையினையும் அதில் ஒரு செல் நம்பரினையும் எழுதி கொடுத்து விட்டு ₹2680 யை உடனடியாக தறுமாறு கேட்டுள்ளனர்.

 ராஜேஸ்வரி அவர்கள் செல்வதை நம்பி நமது வங்கி கணக்கில் தொகை வந்ததும் எடுத்து கொடுத்து விடலாம் என நினைத்து பக்கத்தில் உள்ளவர்களிடம் கடன் வாங்கி வந்து அந்த நபர்களிடம் பணத்தினை கொடுத்துள்ளார். பின்னர் நேற்று காலையில் அந்த நபர்கள் கூறிய வங்கிக்கு அவர்கள் எழுதி கொடுத்த பேப்பரினையும் எடுத்து கொண்டு  வந்து கேட்டுள்ளார். அப்போது வங்கியில் உள்ளவர்கள், நீங்கள் கூறுவதுபோல் எந்த நபர்களும் இங்கு இல்லை என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி அந்த நபர்கள் எழுதி கொடுத்த செல் நம்பரில் தொடர்பு கொண்டார். மறுமுனையில் பேசிய நபர் அது பற்றி எதுவும் தெரியாது என கூறி தொடர்பினை துண்டித்துள்ளார். பின்னர் அதே நம்பருக்கு பலமுறை தொடர்பு கொண்டும் போனை எடுக்கவில்லை, இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஸ்வரி தான் ஏமாற்றபட்டதை உணர்ந்தார். பின்னர் இது பற்றி ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப் போவதாக கண் கலங்கியவாறு தெரிவித்தார்.  பட்டபகலில் விதவை பெண்ணை ஏமாற்றி பணம் பறித்த சம்பவம்  செண்பகராமன்புதூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Benson ,Chembankara Rambudur ,
× RELATED பரமக்குடி தாலுகா அலுவலகத்தில்...