×

காரிமங்கலம் பேரூராட்சியில் மின்விளக்கு பழுதால் மக்கள் இருளில் தவிப்பு சீரமைக்க கோரிக்கை

காரிமங்கலம், ஜன.3:  தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் பேரூராட்சியில் 15 வார்டுகளில் 7,000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். பேரூராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர், தெரு விளக்கு, சுகாதார வசதி உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு வார்டுகளில் தெருவிளக்குகள் எரிவதில்லை. குறிப்பாக பாலக்கோடு ரோட்டில் ஏரிக்கரையில் இருந்து ரம்யா தியேட்டருக்கு செல்லும் வழியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. கடைவீதி, பேருந்து நிலையம், பாலக்கோடு ரோடு, கடைவீதி, மலைக் கோவிலுக்கு செல்லும் பாதை, வெள்ளையன்கொட்டாவூர், சின்னமிட்டஅள்ளி, பெரிய மிட்ட அள்ளி, காட்டுசீகலஅள்ளி,  உட்பட்ட பகுதிகளில் தெருவிளக்கு எரியவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி கொள்வது தொடர் கதையாக நடந்து வருகிறது. இப்பகுதியில் டாஸ்மாக் கடை உள்ள காரணத்தால் குடித்து விட்டு ஆங்காங்கே நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிக்கும் சம்பவமும் நடக்கிறது. மேலும், பல்வேறு சமூக விரோத செயல்களும் அரங்கேறி வருகிறது. தெரு விளக்குகள் எரியாதது குறித்து மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் பேரூராட்சி நிர்வாகம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மக்கள் நலன்கருதி எரியாத தெருவிளக்குளை சீரமைக்கவும், தெரு விளக்குகள் இல்லாத பகுதிகளில் புதிய தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : shores ,
× RELATED ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் கரையோரம்...