×

கோபி கொடிவேரி அணையில் உயிர் பலியை தடுக்க நடவடிக்கை

கோபி, ஜன. 3: கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் உயிர் பலியை தடுக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோபி அருகே உள்ள கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே சுமார் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணை ஆகும். இந்த அணையில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் அருவி போல் கொட்டுவதால், அரசு விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர். இந்த அணையின் வடக்கு பகுதியில் மணல் போக்கி உள்ளது. மணல் போக்கியில் இருந்து முழு வேகத்துடன் தண்ணீர் வெளியேறும் இடத்தில் சுமார் 10 முதல் 15 அடி ஆழத்திற்கு குழி ஏற்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு மணல் போக்கியால் ஏற்பட்டுள்ள குழி தெரிவதில்லை. அந்த பகுதிக்கு சுற்றுலா பயணிகள் செல்லும் போது சுழலில் சிக்கி பலியாகி வருகின்றனர். கடந்த மாதத்தில் மட்டும் 4 பேர் பலியாகி உள்ளனர்.

இந்நிலையில் கொடிவேரி அணையில் உயிர்பலியை தடுக்க மாவட்ட நிர்வகம் மற்றும் காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் மணல் போக்கி வழியாக தண்ணீர் வெளியேறும் இடத்தில் தான் உயிர் பலி ஏற்படுவது தெரிய வந்தது.  இதையடுத்து மணல் போக்கியால் ஏற்பட்டுள்ள குழியின் ஆழம் மற்றும் அகலம் குறித்து கடந்த மாதம் பொதுப்பணித்துறையினர் ஆய்வு செய்தனர். இதில் மணல் போக்கி வழியாக தண்ணீர் வெளியேறும் இடத்தை சுற்றிலும், ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பீட்டில் 75 மீட்டர் நீளம் மற்றும் 50 மீட்டர் அகலத்திற்கு கருங்கற்கள் மற்றும் மணல் கொண்டு நிரப்ப முடிவு செய்தனர். இதுகுறித்து பொதுப்பணித்துறையினர் கூறியதாவது:
தற்போது முதல் கட்டமாக நடந்த ஆய்வின் அடிப்படையில் ரூ.1 கோடியே 56 லட்சம் மதிப்பீடு செய்யப்பட்டு சிறப்பு நிதி வழங்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். நிதி வழங்கப்பட்ட பின்னர் பணியை தொடங்கிய பின்னரே முழுமையான செலவினம் குறித்து தெரியவரும் என்றார்.

Tags :
× RELATED தகிக்கும் கோடை வெயில் பறவைகளுக்கு...