×

ராப்பத்து உற்சவத்தின் 10ம் நாள் விழா ரங்கத்தில் நம்பெருமாள் தீர்த்தவாரி

திருச்சி, டிச.28:  ரங்கம் ரங்கநாதர் கோயிலில்  வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவத்தின் 10ம்நாளான நேற்று நம்பெருமாள் சந்திரபுஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டார். ரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ராப்பத்து உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று நம்பெருமாள் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு பரமபதவாசல் வழியாக சந்திரபுஷ்கரணி குளத்திற்கு சயனப்பெருமாளுடன் வந்து சேர்ந்தார். அங்கு நம்பெருமாளுக்கு பதிலாக சயனப்பெருமாள் காலை 11 மணிக்கு சந்திரபுஷ்கரணி குளத்தில் புனித நீராட, நம்பெருமாள் கரையில் நின்றவாறு சந்திரபுஷ்கரணியில் சயனப்பெருமாள் நீராடுவதை கண்டருளினார்.பின்னர் சயனப்பெருமாள் பரமபதவாசல் வழியே மூலஸ்தானம் சென்றடைந்தார். நம்பெருமாள் அங்கிருந்து திருமாமணி மண்டபத்திற்கு பகல் 1 மணிக்கு வந்து சேர்ந்தார். அங்கு பகல் 1.30 மணிமுதல் மாலை 6.30 மணிவரை பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அதனை தொடர்ந்து மாலை 6.30 மணிமுதல் இரவு 9 மணிவரை நம்பெருமாளுக்கு பக்தர்கள் சேவையுடன் திருமஞ்சனம் நடைபெற்றது. இரவு 11 மணிமுதல் இன்று (28ம் தேதி) அதிகாலை 3 மணி வரை அரையர் சேவையும், திருப்பாவாடை கோஷ்டியும் நடைபெற்றது. நேற்று காலை 9.30 மணிமுதல் மாலை 6 மணிவரையிலும், மாலை 6.45 மணிமுதல் இரவு 9 மணிவரையிலும் மூலவர் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். காலை 10.30 மணிமுதல் இரவு 8 மணிவரை பக்தர்கள் பரமபதவாசலை கடந்து சென்று தரிசனம் செய்தனர். ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள திருமாமணி மண்டபத்தில் நம்பெருமாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக வேதவிண்ணப்பம் படித்த பட்டருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் மாலை மரியாதைகள் செய்து அவரது வீடுவரை கோயில் அலுவலர்கள் கொண்டு சென்றுவிட்டு வந்தனர்.

நம்பெருமாள் நேற்று இரவு முழுவதும் ஆயிரங்கால் மண்டபத்தில் திருமாமணி மண்டபத்தில் இருந்தவாறு ஆழ்வார்கள், ஆச்சார்யார்களுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதனை தொடர்ந்து இன்று (28ம் தேதி) அதிகாலையில் நம்மாழ்வார் மோட்சம் நிகழ்ச்சி காலை 6 மணிமுதல் 7 மணிவரை நடைபெறுகிறது. அதன்பின், நம்பெருமாள் காலை 9.30மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு 10.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். அதன்பின் மூலஸ்தானத்தில் இரவு 8.30 மணிமுதல் 9 மணிவரை இயற்பா பிரபந்தம் தொடங்குகிறது. அதன்தொடர்ச்சியாக இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணிவரை சந்தனு மண்டபத்தில் இயற்பா பிரபந்த சேவை நடைபெறுகிறது. அதன்பின் அதிகாலை 4 மணிமுதல் 5 மணிவரை சாற்றுமறை நடக்கிறது. இத்துடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது. இன்று (28ம் தேதி) பகல் 1 மணிமுதல் 6 மணிவரை மூலஸ்தானம் சேவை உண்டு, மாலை 6 மணிக்கு மேல் மூலஸ்தான சேவை கிடையாது. ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் ஜெயராமன் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்திருந்தனர்.

Tags : celebration ,Rappattu ,Nirverumal Thirisavi ,festival ,
× RELATED கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை...