×

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கோவையில் வரும் 14ம் தேதி முப்பெரும் விழா: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

சென்னை: கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, 40 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெற்ற வெற்றிக்குத் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றிக்கு அழைத்து சென்ற தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய மூன்றும் இணைத்து முப்பெரும் விழாவாக வரும் ஜூன் 14ம் தேதி கோவையில் கொண்டாடுவது என நேற்று திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக எம்பிக்கள் கூட்டம் தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடந்தது. இந்த கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து எம்பிக்கள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மக்களவையில் திமுக எம்பிக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: திமுக மற்றும் தோழமைக் கட்சிகளை 40 இடங்களிலும் வெற்றி பெற வைத்த தமிழ்நாட்டு வாக்காளர் பெருமக்களுக்கு இக்கூட்டம் இதய பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மாபெரும் வெற்றியைத் தேடித்தந்த தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நெஞ்சார்ந்த நன்றியையும், மனமுவந்த பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்கிறது. தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளிலும் பெற்ற வெற்றிக்குத் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, இந்தியாவே வியந்து பார்க்கும் இந்த வெற்றிக்கு நம்மை அழைத்துச் சென்ற தலைவர் – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா ஆகிய மூன்றையும் இணைத்து முப்பெரும் விழாவாக வரும் ஜூன் 14ம் தேதியன்று கோவையில் கொண்டாடுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தான் நினைத்ததைச் செய்ய முடியாத அரசியல் நெருக்கடிக்குள் இப்போது பா.ஜ. தள்ளப்பட்டுள்ளது. இதுவே இந்தியா கூட்டணியின் முதல் வெற்றியாகும். நாடாளுமன்ற வளாகத்துக்குள் இருந்த மகாத்மா காந்தி, அம்பேத்கர் உள்ளிட்ட தேசத் தலைவர்களின் சிலைகளை அகற்றிய பிரதமர் மோடி அரசுக்குக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். மோசடித்தனமான நீட் தேர்வு முறை அறவே கூடாது. இத்தேர்வு முறையையே முழுமையாக விலக்க வேண்டும். அல்லது நீட் தேர்வு வேண்டாம் என்று சொல்லும் மாநிலங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் இதனை நாங்கள் எழுப்புவோம்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் சந்திரபாபு நாயுடு, நிதிஷ் குமார் இந்தக் கோரிக்கையைக் கனிவுடன் கவனித்து ஒன்றிய அரசுக்கு உணர்த்த வேண்டும். நாடாளுமன்றத்தின் கட்டுப்பாட்டில் இருந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த பி.எஸ்.எஸ் அணிக்கு மாற்றாக, ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சி.ஐ.எஸ்.எப் வீரர்களைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தும் முடிவு கண்டிக்கத்தக்கது. அம்முடிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கோவையில் வரும் 14ம் தேதி முப்பெரும் விழா: திமுக எம்பிக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,DMK ,CHENNAI ,Tamil Nadu ,President ,Chief Minister ,M.K.Stalin ,
× RELATED கோவையில் நடைபெறும் திமுக முப்பெரும்...