×

மேலூர் அருகே சுடுகாட்டுக்கு பாதையின்றி கிராமத்தினர் தவிப்பு

மேலூர், டிச. 28: மேலூர் அருகில் சுடுகாட்டிற்கு செல்வதற்கு பாதை இல்லாமல் பயிர் செய்துள்ள நெல்வயலுக்குள் பிணத்துடன் இறங்கி செல்லும் அவல நிலை தொடர்கிறது.மேலூர் அருகே கச்சிராயன்பட்டி ஊராட்சியில் உள்ளது பாப்பாகுடிபட்டி. இங்கு ஒரே சமூகத்தை சேர்ந்த 40 குடும்பங்கள் உட்பட சுமார் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு என ஊருக்கு வெளியில் தனி சுடுகாடு உள்ளது. ஆனால் அதற்கென சரியான பாதை இல்லாததால் வயல்வெளிகளில் இறங்கி தான் செல்ல வேண்டும்.விவசாயம் நடைபெறாத காலங்களில் சுடுகாட்டிற்கு செல்வதில் பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் கண்மாய்களில் நீர் நிறைந்து விவசாய பணிகள் நடைபெறும் நேரத்தில் யாராவது இறந்து போனால் அவர்களின் சடலத்தை எடுத்து செல்வதில் மிகுந்த பிரச்சனை உள்ளது. சுமார் 300 மீட்டர் வரப்புகளில் நடந்து சென்று 700 மீட்டர் தூரம் வரை பயிர் செய்துள்ள வயலுக்குள் இறங்கி தான் செல்ல வேண்டும். நேற்று இவ்வூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி இருளாண்டி(70) என்பவர் உடல் நலக்குறைவால் இறந்து போனார். அவரின் உடலை நடவு செய்த நெற்வயலுக்குள் இறங்கி கிராம மக்கள் சுடுகாட்டிற்கு தூக்கி சென்றனர்.

இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது, சுடுகாட்டிற்கு பாதை கேட்டு தாசில்தார் முதல் கலெக்டர் வரை மனு கொடுத்து விட்டோம். அதேபோல் ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகள் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி செல்வதுடன் சரி.
இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை.விவசாயம் நடைபெறாத காலங்களில் பிரச்னை இல்லை. விவசாய பணிகள் நடைபெற்றுள்ள போது சாவு விழுந்தால் நாங்கள் கூடுதலாக கவலை பட வேண்டி உள்ளது. கூட்டமாக நடவு செய்துள்ள வயலுக்குள் நடந்து செல்லும் போது நெற்பயிர்கள் நாசமாகி விடுகிறது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலனவர்கள் சுடுகாட்டிற்கு தங்கள் வயல் பகுதியில் இருந்து இடம் தருவதற்கு தயராக உள்ளனர்.ஒரு சிலர் மட்டுமே இடம் தருவதற்கு தயராக இல்லை. அவர்களிடம் வருவாய் துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி எங்கள் பகுதிக்கு உடனடியாக சுடுகாட்டு பாதை ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

Tags : creek ,Melur ,
× RELATED மேலூர் அருகே திருவாதவூரில் மீன்பிடி திருவிழா..!!