×

மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்களில் சீறி பாயும் வாகனங்களுக்கு கடிவாளம் 20 கி.மி வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும்

நாகர்கோவில், டிச.21:  பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பாலங்களில் போக்குவரத்து தொடங்கியுள்ள நிலையில் மணிக்கு 20 கி.மீ வேகத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது.
நாகர்கோவில், பார்வதிபுரத்தில் ₹114 கோடியில் மேம்பாலம் அமைக்க கடந்த ஆண்டு அடிக்கல் நடப்பட்டு, தற்போது பணிகள் நிறைவடைந்துள்ளன. மார்த்தாண்டத்தில் புதிய மேம்பாலம் அமைக்கும் பணிகள் ₹220 கோடியில் நடந்து வந்த நிலையில் இப்பணிகளும் பெரும்பாலும் முடிந்து விட்டது. இந்த பாலங்களின் கீழே அணுகு சாலைகள் சீரமைக்க வேண்டியது உள்ளது. அந்த பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.  இப்பாலங்களில் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து விடப்பட்ட நிலையில் வாகன போக்குவரத்திற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. பரிசோதனை அடிப்படையில் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. கனரக வாகனங்கள் உட்பட அனைத்து விதமான வாகனங்களும் கட்டுப்பாடு ஏதுமின்றி பாலத்தில் சீறி பாய்கின்றன. சாலையோரங்களில் பார்க்கிங், வாகன நெரிசல் இல்லை, பொதுமக்கள், பாதசாரிகள் நடமாட்டம் இல்லை என்பதால் வாகனங்களின் வேகம் மேம்பாலத்தில் அளவுக்கு அதிகமாவே இருந்து வருகிறது. இரு சக்கர வாகன ஓட்டிகள், சொகுசு கார்களில் செல்வோர் மணிக்கு 80 கி.மீ வேகத்தில் வரை பாலத்தில் செல்கின்ற நிலை உள்ளது. இதனால் பாலம் கணிசமாக அதிருகிறது. அதில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்கள் ஆடுகிறது.

பாலம் போக்குவரத்திற்கு திறந்து விடப்பட்டுள்ள போதிலும் பாலத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பார்வதிபுரத்தில் நேற்று தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் பாலம் தொடங்கும் பகுதியில் மணிக்கு அதிகபட்சம் 20 கி.மீ வேகத்தில்தான் செல்ல வேண்டும் என்பதை குறிக்கும் சிக்னல் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. பாலத்தில் வேகத்தை குறைக்க வாகன ஓட்டிகளை அறிவிக்கும் வகையில் இந்த போர்டுகள் நேற்று வைக்கப்பட்டன.  பாலத்தில் செல்லும்போதும் வேகம் குறைய வேண்டும் என்பதற்கான போர்டுகளும் வைக்கப்பட்டு வருகிறது.   மேலும் பார்வதிபுரம் பாலத்தில் ஒரு வழிப்பாதையில் செல்லக்கூடாது என்று பாலம் ‘ஒய்’ வடிவில் பிரியும் இடத்தில் வலது புறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பாலத்தில் வர்ணம் பூசுதல், பஸ் ஸ்டாண்ட் அமைய உள்ள இடத்தில் சீரமைப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மார்த்தாண்டம் மேம்பாலத்தில் சில இடங்களில் 20 கி.மீ வேகத்திலும், ஒரு சில இடங்களில் 40 கி. மீ வேகத்தில் செல்ல அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.  

மேலும் பார்வதிபுரம் பாலத்தில் இணைப்பு சாலைகள் தொடங்கும் இடங்களில் இருந்து வரும் வாகனங்கள் அடுத்த இணைப்பு சாலையை கடக்கவும், சாலையை கடக்கவும் மிகுந்த சிரமம் அடைய வேண்டிய நிலை உள்ளது. அதனை போன்று பார்வதிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அருகே உள்ள பகுதிகளில் பாலம் தொடங்கும் இடத்தில் மீன் மார்க்கெட் நெருக்கடியான இடத்தில் செயல்பட்டு வருகிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் இந்த இடம் விபத்து அபாயத்தை ஏற்படுத்தும் விதத்தில் இருப்பதாக வாகன ஓட்டிகள் கூறி வருகின்றனர். இதுபோன்ற குறைபாடுகளை சீர்செய்யவும் தேசிய நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

மரக்கிளைக்கு ஒளிரும் ஸ்டிக்கர்
பாலத்தின் உயரம் பல வீடுகளின் மொட்டைமாடிகளை தொட்ட வண்ணம் உள்ளது. பாலத்தில் இருந்து ஏறி குதித்தால் எளிதாக வீடுகளை அடையும் நிலையும் பல இடங்களில் உள்ளது. மேலும் பார்வதிபுரம் பாலத்தில் ‘ஒய்’ வடிவ பகுதி அருகே நாவல் மரம் ஒன்றின் கிளைகள் பாலத்தில் உள்ள சாலையில் நீட்டியவாறு உள்ளன. பல்வேறு மரங்கள் இப்பகுதியில் பாலத்திற்காக முறிக்கப்பட்டபோதிலும் இந்த மரத்தின் கிளையை அகற்றாமல் நீட்டியுள்ள கிளை மீது ஒளிரும் ஸ்டிக்கர்களை ஒட்டிவிட்டுள்ளனர். ஆனால் வளைவான பகுதியில் உள்ள இந்த மரக்கிளை விபத்து அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. வாகனங்கள் இந்த கிளைகளில் எதிர்பாராதவிதமாக மோதும் நிலையும் உள்ளது.

போக்குவரத்து நெரிசல்
 மார்த்தாண்டம் மேம்பாலத்தின் வாகனங்கள் செல்ல அனுமதித்தாலும் பாலம் பணி  இன்னும் முழுமையாக நிறைவு பெற வில்லை. இதனால் பாலத்தில் கடும் போக்குவரத்து  நெரிசல் ஏற்படுகிறது.மார்த்தாண்டம் பாலத்தை பொறுத்தவரை  நாகர்கோவில்- களியக்காவிளை நோக்கி செல்லும் வாகனங்கள் தடையின்றி சென்று வர  முடியும். ஆனால் களியக்காவிளையில் இருந்து மார்த்தாண்டம் பஸ் நிலையத்திற்கு  வரும் வாகனங்கள் பாலத்தில் ஏறிவிட்டால் காந்தி மைதானம் பகுதியில் இறங்க  முடியாது. இதனால் பாலத்தில் பம்மம் சென்று அங்கிருந்து திரும்பி பாலத்தின்  கீழே உள்ள சாலை வழியாக பஸ் நிலையம் செல்ல வேண்டும்.இதுபோல் பஸ்  நிலையத்தில் இருந்து பம்மம் வழியாக செல்ல வேண்டிய வாகனங்கள் பாலத்தில்  செல்ல முடியாது.  பாலத்தின் கீழ் உள்ள சாலை இன்னும் சீரமைக்கப்படவில்லை.  சாலை மேடு, பள்ளம், மண் குவியல், ஜல்லி குவியலுடன் காணப்படுகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தற்போது  கிறிஸ்துமஸ் சீசன் என்பதாலும், சபரிமலை சீசன் என்பதாலும் மார்த்தாண்டம்  பகுதிக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வருகின்றன. சாலை சீரமைக்கப்படாததாலும்  போக்குவரத்து சிக்கலுக்கு சரியான தீர்வு ஏற்படுத்தாததாலும் கடும் நெரிசல்  ஏற்படுகிறது. 220 கோடி ரூபாயில் மேம்பாலம் கட்டியும் அதனால் எந்த பலனும்  இல்லாத நிலை உள்ளது.எனவே உடனடியாக மார்த்தாண்டம் மேம்பாலத்தின்  கீழ் உள்ள சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து வாகனங்கள் தடையில்லாமல்  செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை  விடுத்துள்ளனர்.

Tags : Marthandam ,
× RELATED மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து...