×
Saravana Stores

தமிழக கபடி அணியில் விளையாட முத்தூர் அரசு பள்ளி மாணவிகள் தேர்வு

வெள்ளக்கோவில்,டிச.20: தமிழக கபடி அணியில் விளையாட முத்தூர் அரசு பள்ளி மாணவிகள் தேர்வாகி உள்ளனர்.திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள தொட்டியபாளையத்தை சேர்ந்தவர்  ரஞ்சனி(16). சாலியங்காட்டுப்பள்ளத்தை சேர்ந்தவர் சரிதா(16). இவர்கள் இருவரும் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்2 படித்து வருகின்றனர். சிறு வயது முதலே கபடியில் ஆர்வம் கொண்ட ரஞ்சனி, சரிதா இருவரும் பள்ளி அளவிலும், வட்டார அளவிலும், மாவட்ட அளவிலும் நடைபெற்ற கபடி போட்டியில் கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளனர். இந்நிலையில் இந்திய விளையாட்டு குழுமத்தின் சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மண்டல அளவில் 20 வயதுக்குட்பட்டோருக்கான நடத்தப்பட்ட மாணவிகளுக்கான கபடி போட்டியில் மாணவிகள் ரஞ்சனி, சரிதா ஆகிய இருவரும் சிறப்பாக விளையாடி முதன் முதலாக தேர்வு பெற்றனர்

இதே போல அக்டோபர் மாதம் மத்திய பிரதேசத்தில் நடந்த மாநில அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி இரண்டாவதாக தேர்வு பெற்று காலிறுதி வரை சென்று விளையாடி வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளனர். கடந்த மாதம் தேசிய விளையாட்டுக்குழுமம் சார்பில் திருப்பூரில் நடைபெற்ற மண்டல அளவிலான கபடி போட்டியிலும் மாணவிகள் ரஞ்சனி, சரிதா கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார்கள்.
இதனை தொடர்ந்து தஞ்சாவூரில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற மாநில அளவிலான கபடி போட்டியில் கலந்து கொண்டு விளையாடி மாணவிகளுக்கான தமிழக கபடி அணியில் இடம் பிடித்துள்ளனர். அடுத்த மாதம் வருகிற ஜனவரி மாதம் 3ந் தேதி முதல் 8ந் தேதி வரை 8 நாட்கள் புதுடெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான மாணவிகளுக்கான கபடி போட்டியில் தமிழக அணியில் விளையாடுவதற்கு மாணவிகளான ரஞ்சனி, சரிதா ஆகிய இருவரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். சாதனை மாணவிகளை ரஞ்சனி, சரிதாஆகியோர்களை பாராட்டி பள்ளியின் தலைமை ஆசிரியர் நரேந்திரன், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் நடராஜ் ஆகியோர் பாராட்டினர்.

Tags : Muthur ,government school students ,kabaddi team ,Tamil Nadu ,
× RELATED சிறப்பு காவல்படை கபடி அணி வெற்றி...