×

பட்டிவீரன்பட்டி அருகே ‘சரக்கடிக்க’ பயன்படும் தீத்தடுப்பு கோபுரங்கள்

பட்டிவீரன்பட்டி, டிச. 20: வன ஊழியர்களை நியமிக்காததால் பட்டிவீரன்பட்டி அருகே தீத்தடுப்பு கோபுரங்கள் சரக்கடிக்க மட்டுமே பயன்படுகின்றன. பட்டிவீரன்பட்டி அருகே பெரும்பாறை மலைப்பகுதி உள்ளது. போதிய மழையில்லாததால் இவ்வனப்பகுதியில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகளவு உள்ளது. இதனால் மரங்கள், செடி, கொடிகள் காய்ந்து வருகின்றன. பெரும்பாறை - சித்தரேவு மலைப்பகுதியில் மாலை, இரவு நேரங்களில் ‘குடிமகன்கள்’ சரக்குகளுடன் வந்து அப்பகுதியை பாராக பயன்படுத்தி வருகின்றனர். அப்போது சிலர் சிகரெட் பிடித்து விட்டு நெருப்பை அணைக்காமல் சென்று விடுகின்றனர். இதனால் காய்ந்த மரம், செடிகளில் பிடிக்கும் தீ மெதுவாக பரவி காட்டுத்தீயாக மாறி வனப்பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதனால் வன விலங்குகள் பாதிக்கப்படுவதோடு விலை மதிப்பில்லா மரங்கள தீக்கிரையாகி விடுகின்றன.வனப்பகுதிகளில் தீ வைப்பவர்களை கண்காணிப்பதற்காகவும், தீ பரவுவதை தடுப்பதற்காகவும் வனப்பகுதிகளில் பல லட்சம் செலவில் தீத்தடுப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்
ளன.

பெரும்பாறை மலைச்சாலையில் தூக்கிவைச்சான் கல் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள தீத்தடுப்பு கோபுரத்தில் பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் இக்கோபுரத்திலேயே குடிமகன்கள் சரக்கு, ஸ்நாக்ஸ் எடுத்து வந்து முழு நேர பாராகவே மாற்றி விட்டனர். இப்பகுதியில் பெரும்பாலான இடங்களில் மது பாட்டில்கள் உடைந்து கிடக்கின்றன. சிலர் கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டு ஆபத்தான முறையில் செல்பி எடுக்கின்றனர். பல லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள தீத்தடுப்பு கோபுரங்கள் பராமரிப்பின்றி இருப்பது வன ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி வத்தலக்குண்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட இந்த தீ தடுப்பு கோபுரத்திற்கு பணியாளார்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags : Turret towers ,Pattiviranppatti ,
× RELATED பட்டிவீரன்பட்டியில் ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது