×

இனி தேங்காய் சட்னிதான் தக்காளி விலை ‘கிடுகிடு’ பெட்டிக்கு ரூ.60 உயர்வு

ஒட்டன்சத்திரம், டிச. 19: வரத்து குறைவானதை தொடர்ந்து தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. 14 கிலோ கொண்ட ஒரு பெட்டிக்கு ரூ.60 வரை உயர்ந்துள்ளது.
தக்காளிக்கும், பனிக்கும் என்னைக்குமே செட் ஆகாது. பனிக்காலத்தில் தக்காளி செடிகளில் காய்கள் உதிர்தல், செடிகளிலே அழுகுதல், பூச்சி தாக்குதல் உள்ளிட்டவைகளால் விளைச்சல் கடுமையாக பாதிக்கும். தற்போது ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் தக்காளி விளைச்சல் குறைந்துள்ளது.  குறிப்பாக, ஒட்டன்சத்திரம் சுற்றியுள்ள பகுதிகளான ஒட்டன்சத்திரம், விருப்பாட்சி, கேதையுறம்பு, கள்ளிமந்தையம், அம்பிளிக்கை, கரியாம்பட்டி, தேவத்தூர், இடையக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி விவசாயம் அதிகளவு நடக்கும்.

தற்போது இப்பகுதிகளில் விளைச்சல் குறைவால், ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு குறைந்த அளவு தக்காளியே விற்பனைக்கு வந்துள்ளது. மார்க்கெட்டில் கடந்த மாதம் 14 கிலோ பெட்டி தக்காளி ரூ.80 முதல் ரூ.90 வரை வியாபாரிகள் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போது 14 கிலோ எடை கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.140 முதல் ரூ.150 வரை மொத்த வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. மார்க்கெட்டில் இருந்து தக்காளி பெட்டிகள் சென்னை, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.  வரத்து குறைந்துள்ள நிலையில், விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags :
× RELATED கொடைக்கானலில் கஞ்சா விற்ற இருவர் கைது