×

ஹெத்தையம்மன் பண்டிகைக்காக வரும் 26ல் நீலகிரியில் உள்ளூர் விடுமுறை

ஊட்டி, டிச. 19:  நீலகிரி  மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிகளவு வசிக்கின்றனர். படுகர் சமுதாய  மக்களின் குல தெய்வம் ஹெத்தையம்மன் ஆகும். படுகர் இன மக்கள் ஆண்டு தோறும்  ஹெத்தையம்மன் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். ஆண்டுதோறும்  டிசம்பர் மாத இறுதி வாரம் அல்லது ஜனவரி மாதத்தில் படுகர் இன மக்கள்  ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடுவார்கள். இந்தாண்டுக்கான ஹெத்தையம்மன்  திருவிழா கடந்த மாதம் துவங்கியது. நீலகிரி மாவட்டத்தில் பேரகணி, பெத்தளா,  ஒன்னதலை, கூக்கல், பெப்பேன், நுந்தளா மற்றும் சின்னகுன்னூர் உட்பட பல்வேறு  கிராமங்களில் ஹெத்தையம்மன் கோயில்
உள்ளன.

அந்தந்த கிராமங்கள் மற்றும்  சுற்றுவட்டார பகுதி மக்கள் தங்களது பாரபம்பரிய முறைப்படி விழாவை  கொண்டாடுவது வழக்கம். திருவிழாவின் போது நீலகிரி மாவட்டத்தின் அனைத்து  பகுதிகளில் உள்ள படுகர் இன மக்கள் கோத்தகிரி பேரகிணி ஹெத்தையம்மன் கோவிலில்  ஒன்று கூடி ஹெத்தையம்மன் பண்டிகையை கொண்டாடி மகிழ்வார்கள். பண்டிகையின்  போது படுகர் இன மக்கள் தங்கள் பாரம்பரிய வெள்ளை நிற ஆடைகளை அணிந்து  ஹெத்தையம்மனை வழிபடுவார்கள். மேலும், தங்களது பாரம்பரிய நடனத்தையும் ஆடி  மகிழ்வார்கள்.  இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக ஹெத்தையம்மன்  பண்டிகைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இம்முறையும் வரும்  26ம் தேதி புதன் கிழமை உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்  இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதிலாக, ஜனவரி 5ம் தேதி  சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Holidays ,Nilgiri ,Hethiyamman Festival ,
× RELATED கண்காட்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் அகற்றம்