×

கண்காட்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் அகற்றம்

ஊட்டி: மலர் கண்காட்சிக்காக தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் அனைத்தும் அகற்றப்பட்டன. நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு, நிலவும் குளு, குளு காலநிலையை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டுதோறும் கோடை காலத்தில் பல்வேறு விழாக்கள், கண்காட்சிகள் ஆகியன நடத்தப்படுகிறது. குறிப்பாக, ஊட்டி தாவரவியல் பூங்காவில் நடக்கும் மலர் கண்காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு ஆண்டு தோறும் பூங்காவில் 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் காணப்படும்.

மேலும், மலர் கண்காட்சியின் போது, பல லட்சம் மலர்களை கொண்டு பல்வேறு அலங்காரங்கள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும், 44 அடி அகலம் 35 அடி உயரத்தில் டிஸ்னி வேர்ல்டு மலர் அலங்காரம் மேற்கொள்ளப்பட்டிருந்து. மேலும், இந்த கதாபாத்திரத்தில் இடம் பெற்றுள்ள மிக்கி மவுஸ், மின்னி மவுஸ், கூபி, புளூட்டோ, டொனலட் டக் ஆகியவை ஒரு லட்சம் ரோஜா, கார்னேசன் மற்றும் கிரைசாந்தியம் மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டிருந்து. மேலும், 80 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு நீலகிரி மலை ரயில் எஞ்சின் உருவாக்கப்பட்டிருந்தது. பல வகையான கார்னேசன், ரோஜா மலர்களை கொண்டு மலர்களால் தேனீ, முயல், மலர் சுவர், பிரமிடு மற்றும் மலர் கொத்து போன்ற பல்வேறு மலர் அலங்காரங்கள் உருவாக்கப்படவுள்ளது. இதுதவிர, நுழைவு வாயில் பகுதியில் 10 அலங்கார வளைவுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதனை பல லட்சம் சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து சென்றனர்.

இந்நிலையில், இந்த மலர் அலங்காரங்கள் அமைக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேல் ஆன நிலையில், மலர்கள் அனைத்தும் அழுகியும், வாடியும் உதிரத்துவங்கின. இதனால், மலர் அலங்காரங்கள் அலங்கோலமாக காட்சியளிக்கத் துவங்கியது. மேலும், இம்முறை கடந்த சில தினங்களாக ஊட்டியில் மழை பெய்து வரும் நிலையில், குறைந்த நாட்களிலேயே மலர் அலங்காரங்கள் பாதிக்கப்பட்டன. இதனைதொடர்ந்து இந்த மலர் அலங்காரங்களை அகற்ற பூங்கா நிர்வாகம் முடிவு செய்தது. டிஸ்னி வேர்ல்டு, மலை ரயில், அலங்கார வளைவுகள் மற்றும் இதர அலங்காரங்களை பூங்கா நிர்வாகம் அகற்றியது. மேலும், மாடங்களில் வைக்கப்பட்டிருந்த ஆர்கிட் மலர்கள், அவைகளும் அகற்றப்பட்டன. அதற்கு பதிலாக பல ஆயிரம் லில்லியம் மலர்கள் மாடங்களில் வைக்கப்பட்டுள்ளன. அதே போல், வாடாத மலர்கள் சிலவற்றையும் மாடங்களில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.

The post கண்காட்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மலர் அலங்காரங்கள் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district ,
× RELATED பணியிடங்களில் பாலியல் தொல்லை...