×

மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்களில் வாகன போக்குவரத்து இன்று தொடங்குகிறது

மார்த்தாண்டம், டிச. 19: மார்த்தாண்டம், பார்வதிபுரம் மேம்பாலங்களில் வாகன போக்குவரத்து இன்று தொடங்குகிறது. நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் பார்வதிபுரம் மற்றும் மார்த்தாண்டத்தில் புதிய மேம்பாலங்கள் அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டி உள்ளன. இதில் ₹220 கோடியில் நடந்து வந்த மார்த்தாண்டம் மேம்பால பணி தற்போது முடியும் தருவாயில் உள்ளது.   குழித்துறை தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து மார்த்தாண்டம் பம்மம் வரை சுமார் 2.5 கி.மீ தூரத்திற்கு, தென்னிந்தியாவிலேயே மிகவும் நீளமாகவும், தமிழகத்திலேயே மிகவும் பெரிய இரும்பு பாலமாகவும் இந்த மேம்பாலம் உள்ளது.  109 காங்கிரீட் மற்றும் ஸ்டீல் பில்லர்கள் மேம்பாலத்தை தாங்கி நிற்கின்றன. மேம்பாலத்தில் பொதுமக்கள் நடந்து சென்று பார்வையிட்டு, இயற்கை அழகை ரசிக்கும் வகையில் மார்த்தாண்டத்தில் கடந்த நவம்பர் 10ம் தேதியும், பார்வதிபுரத்தில் கடந்த 15ம் தேதியும் மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு மார்த்தாண்டம் மற்றும் பார்வதிபுரம் மேம்பாலங்களில் பரிட்சார்த்த முறையில் வாகன போக்குவரத்து தொடங்குகிறது. வரும் 25ம் தேதி வரை மேம்பாலத்தில் வாகனங்கள் சென்று வரலாம். பின்னர் 4 நாட்களுக்கு வாகன போக்கு வரத்து நிறுத்தப்பட்டு சிறுசிறு வேலைகள் நடக்கும். மீண்டும் 29ம் தேதி ெதாடங்கும் வாகன போக்குவரத்து ஜனவரி 2 வரை ெதாடரும்.
அதன்பிறகு மீண்டும் 12ம் தேதி முதல் தொடர்ந்து பாலத்தில் வாகனங்கள் செல்லலாம். மேம்பாலத்தில் வாகன போக்குவரத்து நிறுத்தப்படும் நாட்களில் கீழ்ப்பக்கமாக வாகனங்கள் செல்லலாம். பாலத்தின் கீழ்ப்பகுதியில் ஒரு பக்க சாலை ஒரு வாரத்தில் தயாராகிவிடும். தற்போது மேம்பாலத்தில் இடங்களை குறிக்கும் வழிகாட்டி பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. பாலம் தொடங்கும் பம்மம் மற்றும் வெட்டுவெந்நி, மார்க்கெட் சாலை பகுதிகளில் இந்த வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.

பம்மத்தில் ரவுண்டானா வேண்டும்
குழித்துறையில் இருந்து ேமம்பாலம் வழியாக வாகனங்கள் வந்தால் மார்க்கெட் சாலையில் திரும்பி செல்ல முடியாது. பாலத்தின் கீழ்ப்பகுதி வழியாகத்தான் வரவேண்டும். தவறுதலாக மேம்பாலத்தில் வந்துவிட்டால் பம்மம் வந்து கீழே இறங்கி ‘யூ டர்ன்’ அடித்து காந்தி மைதானம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.தேசிய நெடுஞ்சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் வேகமாக வந்து கொண்டிருக்கும் நேரத்தில், இப்படி ‘யூ டர்ன்’ போடுவது சுலபமான காரியம் இல்லை. விபத்துக்களும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே பம்மம் பகுதியில் ரவுண்டானா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.

சீரமைக்கப்படாதசாலைகள்
மார்த்தாண்டம் மேம்பால பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள சாலை சீரமைக்கப்படாமல் உள்ளது. இதனால் சாைல குண்டு குழிகளுடன் சகதி காடாக காட்சியளிக்கிறது. இதில் வாகனங்கள் செல்வதற்கு பெரும் சிரமப்பட்டு வருகின்றன. மார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து வெட்டுவெந்நி செல்லும் பகுதியில் பாலத்தின் கீழ் ஒரு பக்கம் சுமார் 100 மீட்டர் தூரம் சாலை போடப்பட்டுள்ளது. மற்ற பகுதிகள் சீரமைக்கப்பட வில்லை. இந்த பகுதி விரைவில் சீரமைக்கப்படும் என பாலப்பணியில் ஈடுபட்டுள்ள நிறுத்தினர் தெரிவித்துள்ளனர்.  இது போல் பார்வதிபுரத்திலும் சிறிது தூரம் சாலை சீரமைத்து, தார் போடப்பட்டுள்ளது.  ஏனய பகுதி சீரமைக்கப்பட வில்லை. இந்த பகுதி ஒரு மாதத்திற்குள் சீரமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Marthandam ,
× RELATED மார்த்தாண்டத்தில் கேரளாவில் இருந்து...