×

காளப்பனஅள்ளியில் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க வலியுறுத்தல்

தர்மபுரி, டிச.16: தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே காளப்பனஅள்ளி ஊராட்சி சென்றாயப்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்களுக்கு 5 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஒரு குடம் தண்ணீர் பிடிக்க ஒரு மணி நேரமாகிறது. நீண்ட நேரம் காத்திருந்து சொட்டு சொட்டாக வரும் நீரை பிடிக்க வேண்டியிருப்பதால் கிராம மக்கள் குடிநீருக்கு கடும் சிரமப்பட்டு வருகின்றனர். சென்றாயப்பட்டியில் உள்ள 2 ஆழ்துளை கிணறுகள் மூலம் தங்களது குடிநீர்  தேவையை பூர்த்தி செய்து வருகின்றனர். தற்போது பருவமழை முற்றிலும் பொய்த்து போன நிலையில் நிலத்தடி நீர்மட்டமும் 1,100 அடிக்கு கீழே சென்று விட்டது.

 ஆழ்துளை கிணற்றில் சில மின் மோட்டார்கள் பழுதான நிலையில் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பழுதான மின்மோட்டார்களை பராமரிக்காமல் அதிகாரிகள் மெத்தனமாக உள்ளனர். ஒகேனக்கல் குடிநீர் குறைந்த அளவே கிடைப்பதால் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கிராம மக்கள் அருகில் உள்ள விவசாய நிலங்களில் கிணறுகளை தேடி அலைந்து கிணற்று நீரை குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளும், பொதுமக்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். தண்ணீர் தட்டுப்பாடு குறித்து பலமுறை ஊராட்சி செயலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் மனு அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து காளப்பனஅள்ளியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Tags : greenhouse ,
× RELATED பசுமை இல்ல வாயுக்கள் வெளியேறுவதை 2030-ம்...