×

ஐவிடிபி நிறுவனம் சார்பில் உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு

₹24 லட்சம் கல்வி உதவித்தொகைகிருஷ்ணகிரி, டிச.16: ஐவிடிபி தொண்டு நிறுவனம் சார்பில் விதவை உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை ₹24 லட்சம் வழங்கப்பட்டது.கிருஷ்ணகிரி ஐவிடிபி தொண்டு நிறுவனமானது மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் வேலூர் மாவட்ட மக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களின் மேம்பாடு மட்டுமின்றி, உறுப்பினர் குழந்தைகளின் கல்வி வளர்ச்சியிலும் இந்நிறுவனம் ஈடுபாடு கொண்டுள்ளது. அவற்றுள் ஒன்று தான் விதவை உறுப்பினர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டமாகும். உறுப்பினர்களில் கணவரை இழந்து மிகவும் ஏழ்மை நிலையில் வாடும் உறுப்பினர்களுக்காக இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டது.அதன்படி, கிருஷ்ணகிரி ஐவிடிபி தலைமை அலுவலக கூட்டரங்கில், கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிறுவனத் தலைவரும், ராமன் மகசேசே விருதாளருமான குழந்தை பிரான்சிஸ் தலைமை வகித்தார். தர்மபுரி டி.ஆர்.எத்திராஜுலு சன்ஸ் நிறுவன உரிமையாளர் சதீஷ்குமார் வாழ்த்தி பேசினார். தர்மபுரி டான்போஸ்கோ மெட்ரிக் பள்ளி முதல்வர் ஜேசுதாஸ், சுண்டம்பட்டி புனித அந்தோணியார் ஆலய பங்கு தந்தை லூர்துசாமி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் 218 உறுப்பினர்களின் கல்லூரி பயிலும் குழந்தைகள் 234 பேருக்கு ₹24 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் பேசிய ஐவிடிபி நிறுவனர், இத்திட்டத்தில் பயன்பெற முந்தைய வருடத்தின் பருவ தேர்வுகளில் தேர்ச்சி பெறுவது மிகவும் முக்கியம். தன் தாயின் சூழ்நிலையை உணர்ந்து மாணர்கள் உதவித்தொகை பெற வேண்டும் என்னும் நோக்கத்தோடு தேர்வில் வெற்றி பெற்று உதவித்தொகை பெறுவது குறிப்பிடத்தக்கது. இதுவரை இத்திட்டத்தில் ₹1கோடியே 73 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. கல்விப்பணிக்காக இதுவரை ₹23 கோடியே 50 லட்சம் வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் ஐவிடிபி நிறுவன நிர்வாகிகள் ஜோஸ்வா,  நந்தினி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : children ,
× RELATED விஜயவாடா நகரில் தாய், மனைவி 2 பிள்ளைகளை...