×

நல்லம்பள்ளி, காரிமங்கலத்தில் தடையை மீறி நடந்த கால்நடை சந்தை

தர்மபுரி, டிச.12:  தர்மபுரி மாவட்டத்தில் தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது. இந்த சீதோஷ்ண நிலையால்  ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு கோமாரி தாக்குதல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை சந்தைகளுக்கு மாவட்ட நிர்வாகம் கடந்த 6ம் தேதி முதல் 31ம் தேதி வரை தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, கடத்தூர், காரிமங்கலம், பாப்பாரப்பட்டி, பென்னாகரம், ஏரியூர், மாரண்டஅள்ளி, பூமிநாதம்பட்டி கூட்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கால்நடை சந்தை வெவ்வேறு நாட்களில் நடக்கிறது.

இந்நிலையில், கால்நடை சந்தைக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது குறித்து போதிய விழிப்புணர்வு செய்யாததால், பல்வேறு பகுதிகளிலும் தடையை மீறி சந்தை நடைபெற்று வருகிறது. கடந்த 9ம் தேதி மாரண்டஅள்ளியில் சந்தை கூடியது. பேரூராட்சி நிர்வாக முறையாக அறிவிப்பு வெளியிட்டு, நடவடிக்கை எடுக்காததால் சந்தை கூடியதாக வியாபாரிகள், விவசாயிகள் குற்றம் சாட்டினர். இந்நிலையில், நல்லம்பள்ளியின் நேற்று காலை வழக்கம் போல் கால்நடை சந்தை கூடியது. இதில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டு ஆடு, மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், கால்நடை சந்தைக்கு தடை விதிக்கப்பட்டது குறித்து விவசாயிகள் இடையே போதிய விழிப்புணர்வு இல்லை. இதுகுறித்து கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகள் மூலம் அறிவிப்பு வெளியிட்டிருந்தால் சந்தைக்கு வந்திருக்க மாட்டோம். எனவே மாவட்ட நிர்வாகம் முறையான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றனர். இதேபோல் காரிமங்கலம் பகுதியிலும் இன்று தடையை மீறி கால்நடை சந்தை கூடியது. இங்கு பல்வேறு மாவட்ட பகுதிகளில் இருந்து விவசாயிகள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Goodland ,Baramulla ,
× RELATED முன்னாள் முதல்வரையே வீழ்த்தி...