ஊட்டி,டிச.11: ஊட்டி அருகேயுள்ள சோலாடா பகுதியில் இருந்து அத்திக்கல் கிராமத்திற்கு ஒரு சாலை செல்கிறது. இச்சாலை வழியாகவே பொதுமக்கள் நாள் தோறும் அரசு பஸ் மற்றும் தனியார் வாகனங்களில் சென்று வருகின்றர். 3 கி.மீ தூரம் உள்ள இச்சாலையில் பெரும்பாலான இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த பள்ளங்களில் எந்நேரமும் தண்ணீர் தேங்கி நிற்பதால், நாளுக்கு நாள் சாலை பழுதடைந்துக் கொண்டே செல்கிறது. சாலையின் இரு புறங்களில் விவசாய நிலங்கள் உள்ள நிலையில், விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் இச்சாலையில் தேங்குகிறது. சாலையோரங்களில் போதிய வடிகால்கள் அமைக்கப்படாத நிலையில், இச்சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், சாலை சேறும் சகதியுமாக மாறுகிறது.
இதனால், இச்சாலை வழியாக பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நடந்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, இப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் நலன் கருதி இச்சாலையை சீரமைத்துத்தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இதே போல கேசினோ சந்திப்பு முதல் சேரிங்கிராஸ் வரையில் சாலையில் அங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. வாகனங்களை மெதுவாக இயக்கும் போது இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இச்சாலை முழுவதும் பழுதடைந்துள்ள நிலையில், கேசினோ சந்திப்பு முதல் அலங்கார் தியேட்டர் வரை வாகனங்கள் அங்காங்கே நீண்ட வரிசையில் நிற்கின்றன. எனவே, இச்சாலை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.