×

குமரியில் கேரல் நிகழ்ச்சிகள் - குடில்கள் அமைப்பு கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் தொடங்கியது வண்ண, வண்ண ஸ்டார்கள் விற்பனை தீவிரம்

நாகர்கோவில், டிச.6 :  குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன. பல்வேறு இடங்களில் கேரல் நிகழ்ச்சிகள், கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஊர்வலங்கள் தொடங்கி உள்ளன.  கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. குமரி மாவட்டத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். கிறிஸ்துமஸ் விழாவுக்கு இன்னும் 19 நாட்களே இருப்பதால், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கிறிஸ்துமஸ் குடில் அமைப்பு, கேரல் நிகழ்ச்சிகள், கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஊர்வலம் உள்ளிட்டவை தொடங்கி உள்ளன. கிறிஸ்துமஸ் பண்டிகையில் மிக முக்கியமாக இடம் பெறுவது ஸ்டார்கள் ஆகும். வீடுகள் மற்றும் தேவாலயங்களில் வண்ண, வண்ண விளக்குகளால் ஸ்டார்கள் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கும். இதற்காக தற்போது ஸ்டார்கள் விற்பனை சூடுபிடித்து உள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் கடைகளில் வண்ண, வண்ண ஸ்டார்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டு இருக்கின்றன. பல கவர்ச்சிகர வண்ணங்களில் மின் விளக்கு பொருத்தப்பட்ட ஸ்டார்களை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள்.

₹200 ல் இருந்து ₹800 மற்றும் அதற்கு அதிகமான விலையிலும் ஸ்டார்கள் விற்பனைக்காக உள்ளன. இந்த ஆண்டு சிறிய அளவிலான கிறிஸ்துமஸ் மரங்களும் அதிகளவில் விற்பனைக்காக வந்துள்ளன. ₹100, ₹150ல் தொடங்கி இந்த வகையிலான கிறிஸ்துமஸ் மரங்கள் விற்பனைக்காக இருக்கின்றன. கிறிஸ்துமஸ் குடில்கள் அமைப்பதற்கான புற்கள் உள்ளிட்டவையும் விற்பனைக்காக உள்ளன. வர்த்தக நிறுவனங்களில் கிறிஸ்துமசை வரவேற்கும் விதமாக பல்வேறு வகையிலான கிறிஸ்துமஸ் தாத்தா பொம்மைகள் வைக்கப்பட்டு இருக்கின்றன. புதிய ஆடைகள் எடுக்க ஜவுளிக்கடைகளிலும் தற்போது மாலை வேளைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. நாகர்கோவிலை சேர்ந்த வியாபாரி ஒருவர் இது குறித்து கூறியதாவது : கடந்த ஆண்டு ஓகி புயல் காரணமாக கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் பெரிய அளவில் இல்லை. வழக்கமான விற்பனை கூட இல்லாததால், நாங்கள் பெரிய அளவில் நஷ்டம் அடைந்தோம். ஆனால் இந்த ஆண்டு தற்போது விற்பனைக்காக அதிகளவில் ஸ்டார்கள், கிறிஸ்துமஸ் மரங்கள் வந்துள்ளன. பொதுமக்களும் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள். பல வண்ணங்களில் விற்பனைக்காக ஸ்டார்கள் உள்ளன. அதிகளவிலான மின் விளக்கு அலங்காரங்களை மக்கள் விரும்புகிறார்கள். வீடுகளில் தொங்க விடுவதற்காக சிறிய ரகங்கள் கூட விற்பனைக்காக இருக்கின்றன. டிசம்பர் 2 வது வாரத்தில் இருந்து விற்பனை அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கிறோம் என்றார்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தேவாலயங்களில் வர்ணம் பூசுதல், மின் விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் பல்வேறு பகுதிகளில் இயேசு கிறிஸ்து பிறப்பை சித்தரிக்கும் வகையில் கிறிஸ்துமஸ் குடில்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன. கடந்த ஆண்டு ஓகியால் கடற்கரை கிராமங்களில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களை இழந்து இருந்தன. இந்த  ஆண்டு கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக கடற்கரை கிராமங்களும் தயாராகி வருகின்றன. வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் மீன் பிடிக்க சென்று இருந்தவர்கள் ஊர் திரும்புவார்கள் என்பதால், கடற்கரை கிராமங்களில் உற்சாகம் கரை புரள தொடங்கி உள்ளது. பள்ளி, கல்லூரிகளிலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. கேரல் நிகழ்ச்சிகள் மற்றும் குடில்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருவதால், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் காவல் துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.

Tags : performances ,celebration ,organization ,Christmas ,color stores ,
× RELATED உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி –...