×

வில்லியனூர் பகுதியில் அதிகரித்து வரும் ரயில் விபத்துகள்

வில்லியனூர், டிச. 5: வில்லியனூர் அருகே உள்ள ரயில் பாதையில் தொடர்ந்து உயிர் பலி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். விபத்துகளை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வில்லியனூர் சுற்றுவட்டார பகுதியில் லட்சக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வில்லியனூர் கிராமங்களின் நகரமாக திகழ்வதால் ஏராளமான பொதுமக்கள் தினமும் இங்கு வந்து செல்கின்றனர். இதனால் வில்லியனூர் பகுதி எப்போதும் போக்கு
வரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக விளங்குகிறது. மேலும் புதுச்சேரியை ஒட்டியுள்ள தமிழக பகுதிகளில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் புதுச்சேரியில் இருந்து வில்லியனூர் வழியாக விழுப்புரம், திருச்சி, உளுந்தூர்பேட்டை உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் எப்போதும் கூட்ட நெரிசல் மிகுந்து காணப்படும். இதனிடையே புதுச்சேரியில் இருந்து செல்லும் ரயில் இடையில் எங்கும் நிற்காமல் நேரடியாக விழுப்புரம் சென்றடைந்ததால் புதுச்சேரி-விழுப்புரம் இடையே உள்ள கிராம மக்கள் விழுப்புரம் செல்ல மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.

இதனை தவிர்ப்பதற்காக திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் மூலம் சில ஆண்டுகளுக்கு முன்பு வில்லியனூர் அருகே உள்ள சுல்தான்பேட்டை, சின்னபாபுசமுத்திரம் உள்ளிட்ட பகுதியில் ரயில் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது. இதையடுத்து இப்பகுதிகளில் உள்ள ரயில் நிலையங்களை பயன்படுத்தி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் பயணம் மேற்கொண்டனர். நாளடைவில் சென்னை, பெங்களூர், மும்பை, கொல்கத்தா, டெல்லி, திருப்பதி மற்றும் மங்களூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ரயில் சேவை துவங்கப்பட்டதால் வடஇந்தியாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ரயில் மூலம் புதுச்சேரிக்கு வந்து செல்கின்றனர்.இந்நிலையில் அடிக்கடி புதுச்சேரிக்கு ரயில் வந்து செல்வதால் ரயில் பாதையை ஒட்டியுள்ள கிராமங்களில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. ஆடு, மாடு முதல் மனிதர்கள் வரை விபத்தில் சிக்கும் நிலை தொடர்ந்து வருகிறது. இதுவரை கடந்த ஓராண்டில் வில்லியனூர் பகுதியில் மட்டும் 50க்கும் மேற்பட்ட கால்நடைகள் 20க்கும் மேற்பட்ட மனிதர்கள் இறந்துள்ளனர். ேமலும், சிலர் ஓடும் பேருந்தில் ஏறுவது ேபால், ஓடும் ரயிலில் ஏறி விபத்தில் சிக்குகின்றனர். இப்பகுதியில் நாளுக்கு நாள் ரயில் விபத்து அதிகரித்துக்கொண்டே வருகிறது. தொடர்ந்து இந்த ரயில் பாதையில் உயிர் பலி அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். விழுப்புரத்தில் இருந்து வில்லியனூர் பகுதிக்கு மது அருந்துவதற்காகவும், மதுவை வாங்கி சென்று தமிழகத்தில் விற்பனை செய்வதற்காகவும் ஏராளமானோர் நாள்தோறும் ரயிலில் வந்து செல்கின்றனர். அவ்வாறு வருபவர்கள் ரயிலில் டிக்கெட் எடுப்பதும் கிடையாது. மேலும் மதுஅருந்திவிட்டு ரயிலில் ஏறும்போது விபத்தில் சிக்குகின்றனர். எனவே அவ்வாறு குற்றச்செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தற்கொலை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Tags : train accidents ,area ,Villianur ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...