×

புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் அரசு டாக்டர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்

தர்மபுரி, டிச.5: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் மருத்துவர்கள் பணி புறக்கணித்து போராட்டம் நடத்தினர். இதனால் நோயாளிகள் அவதிக்கு ஆளாகினர்.தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், தினசரி 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க 260 மருத்துவர்கள்  பணியாற்றி வருகின்றனர். மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதிய உயர்வு வழங்கக்கோரி அரசு மருத்துவர்கள் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் புறக்கணிப்பு போராட்டம் நேற்று நடத்தினர். இந்த போராட்டத்தால், புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதிப்பட்டனர். பல நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றனர்.

இதை தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவமனை நிர்வாகம் சார்பில், அரசு பணியில் இல்லாத பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்களை கொண்டு, புறநோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், பொதுமக்களிடம் ஆதரவு கேட்டு விழிப்புணர்வு நோட்டீஸ் அரசு மருத்துவர்கள் வழங்கினர். தர்மபுரி மாவட்ட அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் டாக்டர்கள் சந்திரசேகர், முருகன், சீனிவாசன், சரவணன், ரங்கசாமி மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதுகுறித்து சங்க நிர்வாகிகள் கூறுகையில், ‘தர்மபுரி மாவட்டத்தில் ஒரு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தலைமை மருத்துவமனை, 4 தாலுகா அரசு மருத்துவமனை, 48 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 418 மருத்துவர்கள் பணியாற்றுகின்றனர். கோரிக்கைகளை வலியுறுத்தி புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், ஒருநாள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட போராட்டமாக வரும் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை அனைத்து அறுவை சிகிச்சைகளையும் நிறுத்துவது. முதலமைச்சர் விரிவான காப்பீட்டு திட்டத்தையும், மருத்துவ மாணவ வகுப்புகளையும் புறக்கணிப்பது மற்றும் 8ம் தேதி முதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உறுப்பினர்களிடம் ராஜினாமா கடிதங்களை பெறுவது என்பது உள்ளிட்ட போராட்டங்கள் நடத்த உள்ளோம்,’ என்றனர்.

Tags : Government doctors ,
× RELATED சினிமா பார்த்தபடி இருந்த பெண்ணுக்கு...