×

பெரம்பலூர் மாவட்டத்தில் ராபி 2018-19 பயிர் காப்பீடு திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்யலாம் வேளாண்துறை அறிவிப்பு

பெரம்பலூர், டிச. 4:  ராபி 2018-19 பயிர் காப்பீட்டு திட்டத்தில் அதிகளவில் விவசாயிகள் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குனர் (பொ) கலைவாணி தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் 2018-19ம் ஆண்டுக்கு ராபி பயிர்களான நெல்- 3 நவரை, மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை, கரும்பு பயிர்களுக்கும், தோட்டக்கலை பயிர்களான மிளகாய், மரவள்ளி மற்றும் வெங்காய பயிர்களுக்கும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பயிர் காப்பீட்டு பிரிமிய தொகையை வங்கி மூலமாகவும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவும் செலுத்தலாம். பயிர்க்கடன் மற்றும் விவசாய நகைக்கடன் பெறும் விவசாயிகள் பிரிமியத்தொகையை கட்டாயமாகவும், கடன்பெறாத விவசாயிகள் விருப்பத்தின்பேரிலும் பிரிமியத்தொகை செலுத்தலாம். விவசாயிகள் பயிர் காப்பீட்டு திட்டத்தில் சேர குடும்ப அட்டை, ஆதார் கார்டு நகல், கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், கணக்கு வைத்துள்ள வங்கி பாஸ் புத்தக முதல்பக்க ஜெராக்ஸ் ஆகியவற்றுடன் செல்போன் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும். கடன்பெறும் விவசாயிகள் அந்தந்த வணிக வங்கிகளிலும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கடன்பெறாத விவசாயிகள் வணிக வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் மூலமும் பதிவு செய்யலாம்.

இந்தாண்டு ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல்- 3 நவரை பயிருக்கு 45 வருவாய் கிராமங்கள், மக்காச்சோளம் 61 வருவாய் கிராமங்கள், உளுந்து 10 வருவாய் கிராமங்கள், நிலக்கடலை 28 வருவாய் கிராமங்கள், கரும்பு 90 வருவாய் கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே அதிகளவில் விவசாயிகள் முன்வந்து தாங்கள் பயிரிட்டுள்ள மற்றும் பயிரிடப்படவுள்ள ராபி பயிர்களுக்கும் பயிர் காப்பீடு செய்து கொள்ளலாம். மேற்கண்ட பயிர்களுக்கான அறிவிப்பு செய்யப்பட்ட வருவாய் கிராமங்களின் விவரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகம், பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பூர், வேப்பந்தட்டை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர்கள் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றார்.பிப்ரவரி 15ம் தேதி கடைசி
விவசாயிகள் பிரிமியம் தொகையாக ஏக்கருக்கு நெல் 3 நவரை பயிருக்கு ரூ.443, மக்காச்சோளம் ரூ.304, உளுந்து ரூ.215, நிலக்கடலை ரூ.374 மற்றும் கரும்பு பயிருக்கு ரூ.2,279, தோட்டக்கலை பயிர்களான மிளகாய் ரூ.925, மரவள்ளி ரூ.1,265 மற்றும் வெங்காயம் ரூ.1,568 செலுத்தி பயன்பெறலாம். பிரிமியம் செலுத்துவதற்கு நெல் 3 நவரை பயிருக்கு 2019 பிப்ரவரி 15ம் தேதி, மக்காச்சோளம், உளுந்து, நிலக்கடலை பயிர்களுக்கு 2019 ஜனவரி 15ம் தேதி, கரும்பு பயிருக்கு 2019 அக்டோபர் 31, தோட்டக்கலை பயிர்களுக்கு 2019 பிப்ரவரி 28ம் தேதி கடைசி நாளாகும்.

Tags : Perambalur District Agriculture Department ,
× RELATED பெரம்பலூரில் வல்லபவிநாயகர் கோயிலில் சங்கடஹர சதுர்த்தி விழா