×

ஏரிக்குள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டினால் தொடர் போராட்டம்

சேலம், டிச.4:சேலத்தை அடுத்த சேலத்தாம்பட்டி ஏரிக்குள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டினால், தொடர் போராட்டம் நடத்தப்படும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்த பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சேலம் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ரோகிணி தலைமையில் நேற்று நடந்தது. இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் மோகன், நிர்வாகிகள் ராஜமாணிக்கம், கலிய பூங்குன்றன், விமலன் உள்ளிட்டோர் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து மனு ஒன்றை அளித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

சேலத்தாம்பட்டியில் கடந்த 2000ம் ஆண்டு 840 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. கடந்த 18 வருடமாக எந்தவித அடிப்படை வசதியும் இன்றி வசித்து வருகிறோம். கழிப்பிடம், சாக்கடை, சுகாதாரமான குடிநீர் இல்லாததால், பல்வேறு நோய் ெதாற்றுகளுக்கு ஆளாகி வருகிறோம். இதனிடையே இந்த குடியிருப்புக்கு அருகிலேயே, 42 கோடியில் புதிதாக 496 வீடுகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, இங்குள்ளவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில், தற்போது புதிய குடியிருப்பை அனுமதிக்க முடியாது. நீர்நிலைகளில் கட்டிடங்கள் கட்டக்கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ள நிலையில், சேலத்தாம்பட்டி ஏரிக்குள் புதிய கட்டிடம் எழுப்பினால், அவை எளிதில் இடிந்துவிழும் அபாயம் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இரு தினங்களுக்கு முன்பு குழியில் இறங்கி போராட்டம் நடத்தியதுடன், போர்வெல் வாகனங்களும் சிறைபிடிக்கப்பட்டது. பொதுமக்களின் எதிர்ப்பையும், நீதிமன்ற உத்தரவையும் மீறி நடந்து வரும் புதிய குடியிருப்பு கட்டும் பணியை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம். இவ்வாறு ெதரிவித்தனர்.

Tags : flat ,lake ,
× RELATED ஓட்டலுக்கு சென்றுவிட்டு வந்த பள்ளி...