சென்னை: தாயுடன் ஏற்பட்ட தகராறில் பேஸ்புக் பக்கத்தில் அவதூறாக பதிவு செய்ததாக சிறுமி கொடுத்த புகாரின்படி, பக்கத்து வீட்டு பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சென்னை கோபாலபுரத்தை சேர்ந்தவர் ராணி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். இவர், அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். ராணியின் ஆண் நண்பரிடம் பக்கத்து வீட்டில் வசித்து வரும் விஸ்வதர்ஷினிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் ராணிக்கும் விஸ்வதர்ஷினிக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இதற்கிடையே ராணியை பழிவாங்க விஸ்வதர்ஷினி பல வழிகளில் முயற்சி செய்தார். ஆனால் அனைத்து முயற்சியும் தோல்வியில் முடிந்தது.
இதனால் ராணியின் மகள் குறித்து விஸ்வதர்ஷினி தனது பேஸ்புக் பக்கத்தில் பாலியல் ரீதியாக பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் ரீதியாக தன்னை பற்றி அவதூறு கருத்து பதிவு செய்த விஸ்வதர்ஷினி மீது தேசிய குழந்தைகள் ஆணையத்துக்கு புகார் அளித்தார். அந்த புகாரின்படி நடவடிக்கை எடுக்க தேசிய குழந்தைகள் ஆணையம் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.ேக.விஸ்வநாதனுக்கு பரிந்துரை செய்தது. அவர் விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். புகாரின்படி, விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு ேபாலீசார் திடீரென இந்த வழக்கை ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றினர்.
அதன்படி, அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது தேசிய குழந்தைகள் ஆணையத்தில் புகார் அளித்த சிறுமி மற்றும் விஸ்வதர்ஷினியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், பாலியல் ரீதியாக பதிவு ெசய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பேஸ்புக்கில் தவறாக பதிவு செய்த விஸ்வதர்ஷினி மீது சிறுமியை பாலியலுக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர்.
* மேற்கு சைதாப்பேட்டை நாகாத்தம்மன் கோயில் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்ற மேற்கு மாம்பலம் கோடம்பாக்கம் சாலையை சேர்ந்த ரமேஷ் (37), தி.நகர் கண்ணம்மாப்பேட்டையை சேர்ந்த விக்கி (எ) விக்னேஷ் (19), ஜேம்ஸ் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 1.2 கிலோ கஞ்சா பொட்டலங்கள், 2,900 பணம், ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது.
* திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பக்தராம் (50). இவர் திருவொற்றியூர் காவல் நிலையம் எதிரே நகை கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 30ம் தேதி இரவு இவரது கடைக்கு வந்த மர்ம நபர் இவர் முகத்தில் மிளகாய் பொடியை தூவி விட்டு 6 சவரன் நகையை பறித்துச் சென்று விட்டார். புகாரின்பேரில், கடைக்கு அருகில் கேட்பாற்று கிடந்த மோட்டார் பைக் குறித்து விசாரித்தனர். அதில், சிவகங்கை மாவட்டம் நேரு பஜார் பகுதியைச் சேர்ந்த சந்துரு (35) என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
இதையடுத்து தனிப்படை போலீசார் சிவகங்கை விரைந்து சந்துரூவின் நண்பர் போல் நடித்து அவரது மனைவி மூலம் அவரை பிடித்தனர். விசாரணையில், அவர் திருவொற்றியூர் அண்ணாமலை நகரில் வசித்து வருவதும், அவரது சொந்த ஊரான சிவகங்கையில் ஏராளமான கடன்கள் ஆகிவிட்டதால், அவர் நகையை திருடியது தெரியவந்தது.