×

அனகாபுத்தூரில் புதிதாக கட்டப்பட்டும் பயனில்லை 2 ஆண்டாக பூட்டி கிடக்கும் நவீன ஆடு அறுக்கும் கூடம்: நகராட்சி குப்பை வண்டிகளின் பார்க்கிங் இடமானது

பல்லாவரம்: அனகாபுத்தூரில் புதிதாக கட்டப்பட்ட நவீன ஆடு அறுக்கும் கூடம் 2 ஆண்டாக பூட்டியே கிடக்கிறது. இதனால், அங்கு நகராட்சி  சொந்தமான குப்பை வண்டிகளை நிறுத்தி வைத்துள்ளனர். அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது பொதுமக்கள் நோய் பீதியில் உள்ளனர்.
அனகாபுத்தூர் நகராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள்  தங்களது பகுதியில் சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் ஆடு இறைச்சியை வாங்குவதை தவிர்க்கும் பொருட்டு, தங்களுக்கு நவீன ஆடு அறுக்கும்  கூடம் அமைத்துத் தர வேண்டும என்று அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

அதன்படி, கடந்த 2013-2014ம் ஆண்டு பல்லாவரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் ₹30 லட்சம் செலவில் அனகாபுத்தூர்  நகராட்சி அலுவலகத்தின் அருகில் நவீன ஆடு அறுக்கும் கூடம் கட்டப்பட்டது. பின்னர், திறக்கப்பட்டு ஒரு சில மாதங்கள் மட்டுமே செயல்பட்டது.  அதன்பிறகு, கடந்த 2 ஆண்டுகளாக பூட்டியே கிடக்கிறது. தற்போது அந்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் தங்களது பழுதடைந்த குப்பை வண்டிகளை  குவித்து வைத்து, அந்தக் கட்டிடத்தையே பழைய குடோனாக மாற்றி வருகின்றனர். இதனால் பொதுமக்களின் வரிப்பணம் வீணாவதுடன், ஆடு அறுக்கும்  கூடத்தை சுற்றிலும் கால்நடைகளின் கழிவுகள் அதிக அளவில் சூழ்ந்து காணப்படுகிறது.

மேலும், அந்தப் பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசிக் காணப்படுவதால், சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் நோய் பீதியில்  உள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘மழைக் காலங்களில் நோய் பராவாமல் இருக்க பொதுமக்கள் என்னென்ன முன்னெச்சரிக்கை  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வரும் நகராட்சி நிர்வாகம், தனது அலுவலகத்தின் அருகிலேயே நிலவும்  சுகாதார சீர்கேடை கண்டு கொள்ளாமல் உள்ளது வேடிக்கையாகவும் அதே சமையத்தில் வேதனையாகவும் உள்ளது.

எனவே, இனியாவது பொதுமக்களின் நலம் கருதி, முதலில் ஆடு அறுக்கும் கூடத்தை சுற்றிலும் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பை வண்டிகளை  முறையாக அப்புறப்படுத்தி, சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்து, அதை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்’’ என்றனர்.

Tags : Anakaputhur ,
× RELATED பல்லாவரம் அருகே மதுபோதை தகராறு:...