×

மணல் குவாரி திறக்காததால் வாழ்வாதாரம் பாதிப்பு ஆட்சியரிடம் வண்டி, மாடுகள் ஒப்படைப்பு

கடலூர், நவ. 29: ஒரு வருடமாக கோரிக்கை வைத்தும் மாட்டு வண்டிகளுக்கென தனியாக மணல்குவாரி அமைத்து தராத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தில் மாட்டு வண்டிகளையும், மாடுகளையும் ஒப்படைக்க வந்த தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டத்தில் 5 ஆயிரம் மாட்டு வண்டிகள் உள்ளன. இத்தொழிலை நம்பி 10 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. இதுபோல் மாட்டுவண்டி மணல் தொழிலை சார்ந்து ஆயிரக்கணக்கான கட்டுமான தொழிலாளர்களும் உள்ளனர். கடலூர் மாவட்டத்தில்  மாட்டுவண்டிகளுக்கு என தனியாக இயக்கப்பட்ட மணல்குவாரிகள் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. இதனால் மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்க்கை கேள்விக்குறியானது. மீறி மணல் எடுத்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அபராதம், வண்டிகள் பறிமுதல் என தொழிலாளர்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர். எனவே கடலூர் அருகே வானமாதேவி, வான்பாக்கம், எலந்தம்பட்டு, பண்ருட்டி அருகே சன்னியாசிபேட்டை, அக்கடவல்லி, முஷ்ணம் அருகே கூடலையாத்தூர், அம்புஜவல்லிப் பேட்டை உள்ளிட்ட இடங்களில் மாட்டுவண்டிகளுக்கு என தனியாக மணல் குவாரிகள் ஒதுக்கீடு செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.

கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கடந்த 1.8.2018 அன்று கடலூர் மாவட்ட மாட்டுவண்டி தொழிலாளர்கள் (சி.ஐ.டி.யூ) சங்கத்தினர் தங்கள் மாட்டுவண்டிகளையும், மாடுகளையும் ஒப்படைப்பதற்காக கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக திரண்டனர். அதனை அடுத்து அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட நிர்வாகம் விரைவில் தனி மணல்குவாரி அமைத்து தருவதாக அறிவித்தது. ஆனால் கடலூர் அருகே அழகியநத்தத்தில் மணல் முழுவதும் சுரண்டப்பட்ட பகுதியில் ஒதுக்கியது. அங்கு மணல் இல்லாத காரணத்தினால் 25 நாட்களில் அது மூடப்பட்டது. கடலூர், பண்ருட்டி, முஷ்ணம் வட்டங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மாட்டுவண்டி தொழிலாளர்கள் தொழில் செய்ய முடியாமல் நடுவீதியில் தள்ளப்பட்டுள்ளனர். மாடுகளுக்கு கடன் வாங்கி தீவனம் வைத்து கடன் சுமையும் ஏறிவிட்டது. மாட்டுவண்டி மணல் கிடைக்காததால் அரசு தொகுப்பு வீடுகளில் கழிப்பறைகள் கட்ட முடியாமல் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. இதனால் 50 ஆயிரம் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே மாட்டுவண்டி தொழிலாளர்களை காப்பாற்றும் நடவடிக்கையாக அவர்களுக்கு தனி மணல்குவாரி ஒதுக்கி தருமாறு கடந்த 14.11.2018 அன்று கடலூர் சார் ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாட்டுவண்டி தொழிலாளர் சங்கம் போராட்டம் நடத்தியது. அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் ஒரு சில நாட்களில் தீர்வு காண்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கஜா புயல் காரணமாக மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர். தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் 28ம் தேதி மாட்டுவண்டிகளையும், மாடுகளையும் ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைப்போம் என்றும் அறிவித்திருந்தனர். கோரிக்கை நிறைவேறாத நிலையில் மாட்டுவண்டி தொழிலாளர்கள் தங்கள் வண்டி மாடுகளையும், மாட்டு வண்டிகளையும் மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க நேற்று காலை கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டனர். ஆட்சியர் அலுவலகத்திலிருந்து ஆல்பேட்டை, மஞ்சக்குப்பம் மணிகூண்டு வரையிலும், செம்மண்டலம் ரவுண்டானா வரையிலும் இதுபோல் பைபாஸ் சாலையில் நீண்ட தூரத்திற்கும் 300க்கும் மேற்பட்ட மாட்டுவண்டிகளை நிறுத்தியிருந்தனர். மாட்டு வண்டி தொழிலாளர்களின் போராட்டத்தினால் கடலூரில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.

இந்த போராட்டத்திற்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கும் மாட்டுவண்டி தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சுப்ரமணியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் திருமுருகன், சி.ஐ.டி.யூ மாநில செயலாளர் கருப்பையன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட துணை தலைவர்  பொன்னம்பலம், நகர செயலாளர் பரணி, ஒன்றிய செயலாளர் விஸ்வநாதன் மற்றும் பலர் உரையாற்றினர். அதனை தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்திற்குள் மாடுகளுடன் நுழைய முயற்சித்த போது அனைவரையும் கடலூர் புதுநகர் போலீசார் கைது செய்தனர்.

Tags : cattle quarry ,supplier ,
× RELATED கோவை மாவட்டம் சூலூரில் சிலிண்டர்...